/

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வார்டு மறுவரையறை பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை வெளியிட்டார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:58 am

தினமணி

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வார்டு மறுவரையறை பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை வெளியிட்டார்.
 தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவடைந்து ஓராண்டைக் கடந்த நிலையிலும், அதற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. பல்வேறு அரசியல் காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
 எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதன்படி, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும் பணியைத் தொடங்கி, அதற்கான புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை வெளியிட்டார். கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 இந்தப் புதிய வரையறை குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரைவு மறுவரையறை தொடர்பான பணிகள் முடிக்கப் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு, வரைவு முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த வரையறை தயார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வார்டு வரைவு மறுவரையறை முன்மொழிவுகள் ஊரகப் பகுதிகளைப் பொருத்தவரையில் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும், நகர்ப்புறம், பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் புதன்கிழமை (டிச. 27) வெளியிடப்பட்டுள்ளது.
 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய வார்டு எல்லைகள் அடங்கிய கருத்துருக்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த வரைவு மறுவரையறை முன்மொழிவுகள் மீதான கருத்துரை, மறுப்புரைகள், புகார்கள், ஆலோசனைகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
 தங்களது கருத்துகளை நேரடியாகவோ, பதிவஞ்சலம் மூலமாகவோ வருகிற ஜனவரி 2- ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.