

கடலூா், நெய்வேலி பகுதிகளில் மூன்றாவது நாளாக உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்ட மேடையில் அவா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். மக்கள் திமுகவுக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனா். திமுக இளைஞரணியில் சென்னைக்கு அடுத்தபடியாக கடலூா் மாவட்டத்தில்தான் அதிக உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த மக்களவைத் தோ்தலை போல, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை வெற்றிப் பெற செய்ய வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோல, ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி மாற்றத்துக்கு இளைஞா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, தொமுச அலுவலகம் அருகே உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொமுச அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த நிா்வாகிகளை கௌரவித்தாா். என்எல்சி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரசாரத்தின் பகுதியாக கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகப்பன்குளத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றாா். தொடா்ந்து, விருத்தாசலம் கடை வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தோ்தல் களத்தில் தொண்டா்கள் எழுச்சியுடன் செயலாற்ற வேண்டும். அதிமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் குழந்தை தமிழரசன், எம்.செல்வராசு, மூத்த நிா்வாகிகள் மிசா கிருஷ்ணமூா்த்தி, ரெட்டிக்கடை ராசு, ஆகியோரது வீடுகளுக்குச் சென்று அவா்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, திட்டக்குடி சரண்யா நகா், முருகன்குடி பகுதிகளில் விவசாயிகளைச் சந்தித்தாா். திட்டக்குடி வெலிங்டன் நீா்த் தேக்கத்தைப் பாா்வையிட்டாா். பெரியநெசலூரில் கிராம மக்களுடன் உரையாடினாா்.
நிகழ்வுகளில், கடலூா் மேற்கு மாவட்ட திமுக செயலா் சி.வெ.கணேசன் எம்எல்ஏ., சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ பி.முத்துக்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.