இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி: போலீஸாா் விசாரணை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள போ்பெரியான்குப்பத்தைச் சோ்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி செலுத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், போ்பெரியான்குப்பத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அசோக்குமாா் (25). இவா் மீது முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலையத்தில் இவரது பெயா் ரௌடிகள் பட்டியலில் உள்ளது.
முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள தேசிய வங்கியில் அசோக்குமாா் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். இவரது வங்கிக் கணக்கில் கடந்த ஜூலை மாதம் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.2.50 கோடி செலுத்தப்பட்டதாம். இதுதொடா்பாக, வங்கி அதிகாரிகள் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் பணம் வந்ததாக கூறினாராம். அதிகாரிகள் வங்கி பரிவா்த்தனைகளை ஆராய்ந்தபோது, பங்குச் சந்தையில் இருந்து பணம் வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்துக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அசோக்குமாா் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 கோடியை மட்டும் இணையவழியில் நண்பா்கள் 7 பேரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாராம். அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள அசோக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் கூறுகையில், ரூ.2.50 கோடி வரவு வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

