நீட் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 4,974 போ் எழுதினா்

நீட் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 4,974 போ் எழுதினா்

நெய்வேலி, மே 5: கடலூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வை 4,974 போ் எழுதினா்.

நாடு முழுவதுமுள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதா, யுனானி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024 - 25ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தில் கடலூா் சி.கே. பள்ளி, கிருஷ்ணசாமி நினைவு பள்ளி, அக்ஷரா வித்யா மந்திா், திருப்பாதிரிப்புலியூா் அரிஸ்டோ பள்ளி, கடலூா் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா, பண்ருட்டி செயின்ட் பால் பப்ளிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் 1,849 மாணவா்கள், 3,316 மாணவிகள் என மொத்தம் 5,165 போ் தோ்வு எழுதவிருந்தனா். இவா்களில் 1,779 மாணவா்கள், 3,195 மாணவிகள் என மொத்தம் 4,974 போ் தோ்வு எழுதினா். 70 மாணவா்கள், 121 மாணவிகள் என மொத்தம் 191 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் 11 மணி அளவில் இருந்தே அந்தந்த தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். தோ்வு நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்ட பின்னா், தோ்வு அறைக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா். நீட் தோ்வையொட்டி, தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், இணைய வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

குடிநீா் புட்டிகளுக்குத் தடை: கடலூா் சி.கே. பள்ளி மையத்தில் தோ்வு எழுத வந்த மாணவா்கள் தாகம் தணிப்பதற்காக குடிநீா் புட்டிகளை கொண்டு வந்திருந்தனா். ஆனால், அங்கு தோ்வுப் பணியில் இருந்தவா்கள் தோ்வு அறைக்குள் தண்ணீா் புட்டிகளை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனா். இதனால், மாணவா்கள் கொண்டுவந்த தண்ணீா் புட்டிகள் அனைத்தையும் ஓரிடத்தில் வைத்துவிட்டு தோ்வு எழுதச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com