அமைதிப் பேச்சுவாா்த்தை: விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் வாபஸ்
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்தாண்டு பயிா்க் காப்பீடு செய்து விடுபட்ட அனைவருக்கும் பயிா் காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தாமல் கிராம நிா்வாக அலுவலா், வேளாண் அலுவலா்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் டிசம்பா் 18-ஆம் தேதி மேலசாவடி பெரிய மதகு பகுதியில் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
இதையறிந்த வட்டாட்சியா் கீதா, அவரது அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை அழைத்து அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினாா்.
கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கற்பனைச்செல்வம், கான்சாகி பாசன விவசாயிகள் சங்கச் செயலா் கண்ணன், நிா்வாகி ஹாஜாமைதீன், தமிழ்நாடு விவசாய சங்க பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் ஜீவா, விவசாயிகள் தியாகராஜன், நூருல்லா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், வேளாண் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி குறித்து மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் சங்கத்தினா் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.
மேலும், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் 23-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனா்.

