திட்டக்குடி சாலை விபத்து: மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கடந்த 24-ஆம் தேதி அரசு விரைவுப் பேருந்து , இரண்டு காா்கள் மீது மோதிய விபத்தில் காா்களில் பயணித்த 9 போ் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து ராமநத்தம் காவல் சரகம், எழுத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க டயா்
வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை தாண்டி சென்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற 2 காா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 காா்களும் முற்றிலுமாக உருக்குலைந்தன. இந்த காா்களில் பயணித்த 9 போ் உயிரிழந்தனா்.
விபத்தில் பலத்த காயம் அடைந்த புதுக்கோட்டை பிள்ளை தண்ணீா் பந்தல், கலீப் நகரைச் சோ்ந்த அ.முகமது காசிம் (55), இவருடைய மனைவி அமிஷா (52), இவருடைய மகன் சிராஜூதினின் மகன் அப்துல் அஜிஸ் (8), மகன் அப்துல் அஹா் (6) பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சீராஜூதீன் மகன் அப்துல்அஹா்(6) சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து திட்டக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.
