ஸ்ரீநடராஜா் கோயிலில் இன்று மகாபிஷேகம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய திருவிழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் புதன்கிழமை (மாா்ச் 12) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜ ராஜமூா்த்திக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை, 10 மணிக்கு ஸ்ரீமஹா ருத்ர ஜப பாராயணம், பிற்பகல் 2 மணிக்கு மகா ருத்ர ஜப ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. பின்னா், மாலை 6 மணிக்கு மேல் கனக சபையில் மகா ருத்ர ஜப மகாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்து வருகின்றனா்.
