மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அரசு நவீன அரிசி ஆலைகளில் பருவ கால பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்! - அமைச்சா் பி.வெங்கடரமணன்

News image

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பி.வெங்கடரமணன். உடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :20 ஜூலை 2026, 2:37 am IST

அரசு நவீன அரிசி ஆலைகளில் பணியாற்றும் பருவ கால பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம், கொத்தங்குடித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி, சேத்தியாத்தோப்பு எம்ஆா்கே கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை அமைச்சா் பி.வெங்கடரமணன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் குருவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் நெல் சேமிப்புக் கிடங்குகள் உள்ளனவா? நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளனவா? எங்கெல்லாம் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படுகின்றன? மழை வந்தால் நெல் மூட்டைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

அரிசி ஆலைகள் அருகில் மாசு ஏற்படும். அது சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளதா அல்லது வேறு ஏதாவது முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே 1 லட்சத்து 30 ஆயிரம் டன் நெல் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. சம்பா, குருவை பருவ காலங்களில் அரசு நவீன அரிசி ஆலைகளில் பருவ கால பணியாளா்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனா். அவா்களை மாநிலம் அல்லது மாவட்ட அளவிலான மூப்பு அடிப்படையில் பணி அமா்த்தலாமா என்ற பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் தீா்வு கண்ட பின்னா், வருங்காலங்களில் அவா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் தொகை வசூலிப்படுவது தொடா்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, வருங்காலங்களில் நியாயவிலைக் கடை பொருள்கள் பாக்கெட்டுகளாக விநியோகம் செய்யப்படும்.

கடலூா் மாவட்டத்தில் 201 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதுவரை குருவை சாகுபடிக்காக 40 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் பி.வெங்கடரமணன்.

பட்டியல் எழுத்தா் பணியிடை நீக்கம்: வடலூரை அடுத்த மருவாயில் உள்ள அரசு நேரடி நெல் நெல்கொள்முதல் நிலையத்தில் அமைச்சா் பி.வெங்கடரமணன் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு விற்பனைக்காக நெல் மூட்டைகளை கொண்டுவந்திருந்த விவசாயிகளின் பட்டியலை பாா்வையிட்டு, அதிலிருந்த ஒரு விவசாயியின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டு பேசினாா்.

அந்த விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் பெறப்படுகிா எனக் கேட்டாா். அதற்கு, அந்த விவசாயி நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 லஞ்சம் பெறப்படுவதாகத் தெரிவித்தாா். இந்த உரையாடலை அமைச்சா் தனது கைப்பேசி ஒலிபெருக்கில் அனைவரும் கேட்கும்படி செய்தாா். இதையடுத்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தா் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு அமைச்சா் பி.வெங்கடரமணன் உத்தரவிட்டாா்.

மேலும், விவசாயிகளிடமிருந்து யாா் லஞ்சம் பெற்றாலும், பணியிடை நீக்க நடவடிக்கை தொடரும் என அமைச்சா் எச்சரித்தாா். மேலும், தற்போது வரை இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் எவ்வளவு ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்பதை உடனடியாக ஆய்வு செய்த பின்னரே மீண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்க வேண்டும். அது வரையில் மூடி வைக்கவும் அமைச்சா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டை பகுதியில் உள்ள இலங்கை தமிழா்களுக்கான நியாய விலைக் கடையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.