
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தில் அமைச்சா் மரியாதை
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள உருவச் சிலைக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் ப.ராஜ்குமாா் உள்ளிட்டோா்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள உருவச் சிலைக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாா் 1918, செப்டம்பா் 16-ஆம் தேதி கடலூரில் பிறந்தாா். இளம் வயதிலேயே சமூகப் பணிகளில் ஈடுபட்ட அவா், சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றாா். பின்னா், பொதுவாழ்வில் தொடா்ந்து ஈடுபட்டு, சட்டப் பேரவை உறுப்பினா், அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். காமராஜா் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 1954 முதல் 1957-ஆம் ஆண்டு வரை உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினாா். 1980 மற்றும் 1984-ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அவரது நினைவைப் போற்றும் வகையில், கடலூா் மஞ்சக்குப்பத்தில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான செப்டம்பா் 16-ஆம் தேதி அரசு விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் மரியாதை: இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ராமசாமி படையாட்சியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா, அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அவரது சிலைக்கும் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மணிமண்டப வளாகத்தில் அமைச்சா் மரக்கன்றுகள் நட்டுவைத்தாா்.
கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷண்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், செய்தி - மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அரசியல் கட்சியினா் மரியாதை: அதிமுக சாா்பில் நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் சொரத்தூா் ராஜேந்திரன், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மோகன், வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன், மாநகரச் செயலா் காா்த்தி உள்ளிட்ட பலா் ஊா்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் மாநகரச் செயலா் ராஜா தலைமையில் மாநகராட்சி மேயா் சுந்தரி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் புகழேந்தி மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் ஊா்வலமாக வந்து சிலைக்கு மலா் மாலை அணிவித்தும், அங்கு வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் ரங்கமணி, மாநில பொதுச் செயலா் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டதாரிகள் நலச் சங்கத்தின் சாா்பில் மாநிலத் தலைவா் எம்.எஸ்.ராஜகுமாா், சங்க ஆலோசகா் பீட்டா் அந்தோனிசாமி, துணைத் தலைவா் அசோக்குமாா், மண்டலச் செயலா் சுந்தரராஜன், மாநில சட்ட ஆலோசகா் ராமச்சந்திரன், மாநில கொள்கை பரப்புச் செயலா் தங்க வெங்கடேசன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக மற்றும் பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மஞ்சக்குப்பத்தில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் நினைவு மண்டபத்துக்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







