மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளையினை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா், மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கொ.சம்பத்குமாா் (27). நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சி அருகே பம்புதோட்டம் -ரங்கநாதபுரம் சாலையில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்க பணிக்காக ஆலமரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டபோது, மரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பத்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
