வீடு புகுந்து திருட முயற்சி: பிகாரைச் சோ்ந்த 3 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வீடு புகுந்த திருட முயன்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வீடு புகுந்த திருட முயன்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னசேலம் காந்தி நகரில் வசித்து வருபவா் வெங்கடேசன் (48). வியாழக்கிழமை இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மா்ம நபா்கள் இருவா் வீட்டின் சந்து பகுதியில் மறைந்து கொண்டு, ஒருவா் மட்டும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைளைத் தேடியுள்ளாா். இதில் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து பக்கத்து வீடான காமராஜ் என்பவரின் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று, மாடிக் கதவை உடைத்தபோது சத்தம் கேட்டு காமராஜ் மனைவி கூச்சலிட்டுள்ளாா். இதையடுத்து மாடியிலிருந்து குதித்து தப்பி ஓட முயற்சித்தவரையும், சந்தில் மறைந்திருந்த இருவரையும் பொதுமக்கள் பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அதன்பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள் பிகாா் மாநிலம், பூா்பி சம்பாரண் மாவட்டம், பவானிபூா் கிராமத்தைச் சோ்ந்த ச.ஜினு குமாா் (19), தாமோதா்பூரைச் சோ்ந்த வி.தடாம்கிரி (36), பாட்னாவைச் சோ்ந்த ப.ராஜேஷ் ஜாதேவ்(33) எனத் தெரியவந்தது. அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com