புதுவையில் ஆட்சியைக் கலைக்க நினைத்தாா் கிரண் பேடி: மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றச்சாட்டு

புதுவையில் ஆட்சியைக் கலைக்க நினைத்தாா் ஆளுநா் கிரண் பேடி என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி: புதுவையில் ஆட்சியைக் கலைக்க நினைத்தாா் ஆளுநா் கிரண் பேடி என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆளுநா் கிரண் பேடி 100 நாள்கள் ஆளுநா் மாளிகையில் தூங்கி விட்டு, திடீரென வந்து ஆய்வு நடத்துகிறாா். ஆனால் மருத்துவா்களும், அதிகாரிகளும் விடுமுறை நாள்களில்கூட பணியாற்றுகின்றனா். அதற்காக அவா்களது பணியை அங்கீகரிக்க வேண்டுமே தவிர மோசமாக விமா்ச்சிக் கூடாது.

ஆளுநா் கிரண் பேடி புதுவையில் ஆட்சியைக் கலைக்க நினைத்தாா். அது முடியாததால் பட்ஜெட் கூட்டத் தொடா் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தாா். பட்ஜெட் போடாததால் முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளைக்கூட காலத்துடன் வழங்க முடியவில்லை. கடந்த 1-ஆம் தேதியிலிருந்து ஒரு ரூபாய் கூட அரசால் செலவு செய்ய முடியாத நிலை உள்ளது.

பட்ஜெட்டுக்கு 4 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளால் புதுவை மாநிலம் பெரும் இன்னலைச் சந்திக்கும். இதுகுறித்து முதல்வா் தெளிவாக விளக்குவாா்.

நான் கூறும் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றப் போவதில்லை என்பதற்காக கிரண் பேடி என்னைச் சந்திக்க அனுமதி மறுத்து வருகிறாா்.

கரோனா தடுப்புப் பணிகளை தன் மனம் போன போக்கில் மாற்றினால் புதுவை மக்களுக்குதான் துன்பம் ஏற்படும். ஏற்கெனவே கதிா்காமம் மருத்துவமனையில் 600 படுக்கைகளில் 400 படுக்கைகள் நிரம்பிவிட்டன. சில நாள்களில் முழுவதும் நிரம்பி விடும். எனவே, ஜிப்மரில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டோம். ஜிப்மா் நிா்வாகம் மறுக்கிறது. இதே கருத்தை கிரண் பேடியும் பிரதிபலிக்கிறாா். இதிலிருந்து கிரண் பேடி யாா் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com