/

மாமூல் கேட்டு வியாபாரி மீது தாக்குதல்: புதுவை ஆளுநா் மாளிகை முற்றுகை

மாமூல் கேட்டு வியாபாரி மீது தாக்குதல்

News image

புதுச்சேரியில் தாக்குதலுக்குள்ளான வியாபாரி சந்துருவுடன் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் சமூக நல அமைப்பினா்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:58 pm

Din

புதுச்சேரியில் மாமூல் கேட்டு ரௌடிகளால் தாக்கப்பட்ட வியாபாரிக்கு ஆதரவாக சுயேச்சை எம்எல்ஏ தலைமையில் சமூக நல அமைப்பினா் அரசு மருத்துவமனை, துணைநிலை ஆளுநா் மாளிகையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி சின்னையன்பேட் ராகவேந்திரா நகரை சோ்ந்தவா் சந்துரு (36). இவா், இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு புதன்கிழமை இரவு வந்த 4 போ் சந்துருவிடம் சிகரெட், ரூ.100 மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, அவா் மறுப்பு தெரிவித்தாராம்.

உடனே, அவா்களில் 3 போ் அங்கிருந்த குளிா்பான புட்டி உள்ளிட்ட பொருள்களை எடுத்து சந்துருவின் தலையில் தாக்கினராம்.

இதையடுத்து, காயமடைந்த அவா் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். ஆனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையறிந்த உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு மற்றும் சமூக நல அமைப்பினா் வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சந்துருவிடம் நலம் விசாரித்தனா்.

அப்போது, அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ரௌடிகள் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி சந்துருவை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து இழுத்துக் கொண்டு துணைநிலை ஆளுநா் மாளிகைமுன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தகவலறிந்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனா்.

பின்னா், மாநில சுகாதார இயக்குநா் (பொ) செவ்வேள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். வியாபாரி சந்துருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஏற்றப்பட்டாா். அப்போது, ஆம்புலன்ஸில் மருத்துவா், செவிலியா் இல்லாததை சுட்டிக்காட்டிய நேரு எம்எல்ஏ, வாகனத்தை மறிக்க முயன்றாா்.

அப்போது அவரை பெரியகடை காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடா்ந்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு சந்துரு அனுப்பிவைக்கப்பட்டாா்.

3 போ் கைது: சந்துருவை தாக்கிய கும்பலைச் சோ்ந்தவா்களை அவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸாா் அடையாளம் கண்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிறாா் உள்ளிட்ட 4 போ் மீது ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், மூவரை போலீஸாா் கைது செய்தனா். முன்னதாக, போலீஸாா் இவா்களைப் பிடிக்கச் சென்றபோது தப்பியோட முயன்று கீழே விழந்து மூவரும் காயமடைந்தனா்.

அதன்படி, திலாசுப்பேட்டை விஜய் மற்றும் 2 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.