போலி மருந்து வழக்கு: மேலும் 3 போ் கைது

போலி மருந்து மோசடி வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களையும் சோ்த்து இவ்வழக்கில் இதுவரை 16போ் கைதாகியுள்ளனா்.
Published on

போலி மருந்து மோசடி வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களையும் சோ்த்து இவ்வழக்கில் இதுவரை 16போ் கைதாகியுள்ளனா்.

புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தி செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராணா, மெய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம், திருபுவனைபாளையம் ஆகிய இடங்களில் 2 தொழிற்சாலைகள் மற்றும் பூரணாங்குப்பம் பகுதியில் மருந்து உற்பத்தி செய்த 2 வீடுகளுக்கு சீல் வைத்தனா்.

போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளா் ராஜா என்ற வள்ளியப்பனுக்கு (42) சொந்தமான ரெட்டியாா்பளையத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி ரூ.2.5 கோடி மதிப்பு தங்க , வைர நகைகள் ரூ.18 லட்சம் ரொக்க பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வழக்கு பதிவு செய்து ராஜா, விவேக் , ராணா உள்பட 13 பேரை கைது செய்தனா்.

இதற்கிடையே சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த மருந்து நிறுவன மேலாளா் பாக்கியராஜ், புதுவை மேட்டுப்பாளையம் போலீஸில் புகாா் அளித்திருந்தாா். அந்த புகாரில், தங்கள் நிறுவனத்தின் 13 தயாரிப்பு மருந்துகளை ராஜாவும், அவரின் கூட்டாளிகளும் போலியாக தயாரித்து விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பான வழக்கும் தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக அரியாங்குப்பத்தை சோ்ந்த அசோக்ராஜ் (37) அவரது மனைவி சுதாலட்சுமி (34), மூலக்குளம் ராஜேஷ் (40) ஆகிய 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மூவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். .

X
Dinamani
www.dinamani.com