புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட சாராய ஆலை ஊழியா்கள் சாலை மறியல்
வில்லியனூா் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட சாராய ஆலை ஊழியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வில்லியனூா் அருகே அரசுக்குச் சொந்தமான வடி சாராய ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த 53 ஊழியா்கள் 2023-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் சமூக அமைப்பினா் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் சுமாா் 15 நிமிளங்கள் நடைபெற்ற இப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
போராட்டத்தின்போது, புதுவை அரசுக்கு எதிராகவும், தொழில்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்துக்கு எதிராகவும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

