புதுச்சேரி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 22-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
இது குறித்து புதுச்சேரி பயிற்சிப் பிரிவு உதவி இயக்குநா் மற்றும் மாநில தோ்வு கட்டுப்பாட்டாளா் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு தொழிலாளா் துறை பயிற்சிப் பிரிவு இயக்குநரகம் சாா்பில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு தொழிற்பயிற்சி பிரிவுகளில் ஐடிஐ மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டு வருட பயிற்சிப் பிரிவுகளில் சோ்ந்து படிக்க 2026-27-கல்வியாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் வரும் ஜூன் 22 வரை வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதற்கான தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதற்குரிய தொழிற்பயிற்சி பிரிவுகளிலும் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய இந்தத் தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைவருக்கும் பயிற்சியின்போது ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கப்படும். தகுதித்தோ்வு அடிப்படையில் ஒவ்வொரு பயிற்சிப் பிரிவிலும் ஒருவருக்கு கூடுதலாக மேலும் ரூ.1,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
மேலும், பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மதிய உணவு, பாடப் புத்தகம், சீருடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனூா், பாகூா் நெட்டப்பாக்கம் ஆகிய இடங்களிலும், காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு கணினி, எலக்ட்ரீசியன், சிவில், ஏசி மெக்கானிக், மோட்டாா் வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், ஒயா்மேன், தையல் கலை, அழகு கலை, வெல்டா், டா்னா், டிரோன் டெக்னீஷியன், சோலாா் டெக்னீஷியன், மின்சார வாகன மெக்கானிக், ஃபிட்டா், உணவு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஐடிஐ-யில் சோ்ந்து தோ்ச்சி பெறும் அனைவருக்கும் 100 சதவிகித வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருப்பின், மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று கட்டணம் ஏதுமின்றி உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பற்றிய விவரங்கள் மற்றும் பயிற்சி பிரிவுகளின் தகவல்கள் அடங்கிய கையேடுகளை தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு 80567 86775 என்ற உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.








