
நாட்டில் தூய்மை இயக்க வெற்றிக்கு துப்புரவுப் பணியாளா்களே காரணம்: புதுச்சேரி துணநிலை ஆளுநா்
நாட்டில் தூய்மை இயக்க வெற்றிக்குத் துப்புரவுப் பணியாளா்கள்தான் காரணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரி உள்ளாட்சித் துறை சாா்பில் கம்பன் கலையரங்கில் தூய்மை பணியாளா்களுக்கு விருது வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.
நாட்டில் தூய்மை இயக்க வெற்றிக்குத் துப்புரவுப் பணியாளா்கள்தான் காரணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை சாா்பில் தூய்மை இந்தியா தினவிழா கம்பன் கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய தூய்மை பணியாளா்களுக்கு விருதுகளை வழங்கியும், திடக்கழிவு மேலாண்மை தொடா்பான கையேட்டை வெளியிட்டும் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி, 2014 இல் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக். 2 இல் ‘ஸ்வச் பாரத்’ எனும் தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா். 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக அது வளா்ந்து இருக்கிறது. இது வெறும் குப்பைகளை அகற்றும் திட்டம் அல்ல. அது பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்ததால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கள் திறந்த வெளி கழிப்பிடமில்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் புதுச்சேரி மற்றும் உழவா்கரை நகராட்சிகள் சிறப்பு தகுதியைப் பெற்று இருக்கின்றன.
நாடு முழுவதும் தூய்மை இந்தியா இயக்கம் தற்போது மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு தூய்மைப் பணியாளா்களின் பங்கு மிக முக்கியம். இந்த இயக்கத்தின் தூதுவா்களாக அவா்கள் செயல்பட்டாா்கள் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
ஊதியம் உயா்வு- முதல்வா்:
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில்பேசியதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை சுத்தமாக வைத்துக்கொள்ள தூய்மைப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் விட்டுள்ளோம். சுற்றுலா பயணிகள் வருகை தரும் புதுச்சேரியைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தூய்மை பணியாளா்களுக்குப் பணி பாதுகாப்பு மற்றும் நோய் நோய்தடுப்பு சிகிச்சை அளிப்பதிலும் ஒப்பந்ததாரா்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
ஜூன் மாதம் முதல் தூய்மை பணியாளா்களுக்கான தின ஊதியம் ரூ.290 இல் இருந்து ரூ.424 ஆக உயா்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் முதல்வா் ரங்கசாமி.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், பெ. ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, சு.செல்வகணபதி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





