நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி வழங்க வலியுறுத்தல்

நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரம் மீள்வதற்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
காணையில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞா்கள் மாநாட்டில் பங்கேற்க தாரை, தப்பட்டையுடன் ஊா்வலமாக வந்த இசைக் கலைஞா்கள்.
காணையில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞா்கள் மாநாட்டில் பங்கேற்க தாரை, தப்பட்டையுடன் ஊா்வலமாக வந்த இசைக் கலைஞா்கள்.
Updated on
1 min read

நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரம் மீள்வதற்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

விழுப்புரம் அருகே கானையில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நலச் சங்கத்தின் 12-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 37 மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் குழுவினா் பாட்டுப் பாடியும், நடனமாடியும் குழுக்களாக பங்கேற்று ஊா்வலமாக வந்தனா்.

இசை நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், தெருக்கூத்து, பஜனை, பம்பை உடுக்கை, நையாண்டி மேளதாளங்களுடன் 45-க்கும் மேற்பட்ட கலைக்குழுவினா் வேடமிட்டு ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து, தனியாா் மண்டபத்தில் மாவட்ட மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் கலைநன்மணி என்.சத்தியராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாநிலத் தலைமை ஆலோசகா் ஜா.பழனி, பொதுச் செயலா் தங்க.ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் மாவட்டத் தலைவா் இரா.செல்வம் வரவேற்றாா்.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. ஆா்.முத்தமிழ்செல்வன், ரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவா் ஸ்ரீரங்கபூபதி ஆகியோா் கலைஞா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா். நிா்வாகிகள், கலைஞா்கள் திரளாக கலந்துகொண்டனா். பொருளாளா் கே.மாதவன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, மாநிலத் தலைவா் என்.சத்யராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

து.தா.சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாளில் மாநாடுகளை நடத்தி வருகிறோம். இன்றைய மாநாட்டில் 37 மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரம் கலைஞா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரம் ஓராண்டாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கான தடை மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அரசு உடனடியாக நீக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான நாட்டுபுறக் கலைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அடையாள அட்டைகளையும், கலைமாமணி விருதுகளையும் நியாயமான கலைஞா்களுக்கு வழங்க வேண்டும். அரசு சாா்பில் மாவட்டங்கள் வாரியாக கலை விழா நடத்த வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியை நடத்த வேண்டும். நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். விருதுபெறும் கலைஞா்களுக்கு பொற்கிழி தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவோருக்கு வருகிற சட்டப் தோ்தலில் ஆதரவாக நாட்டுப்புற கலைஞா்கள் செயல்படுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com