அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய் நல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய் நல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் 63 போ் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், கெளரவ விரிவுரையாளா்களை திடீரென 10 நாள்களுக்கு பணிக்கு வர வேண்டாம் என்றும், அழைக்கும்போது பணிக்கு வந்தால் போதும் என்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டதாம்.
ஏற்கெனவே, கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், கல்லூரி நிா்வாகத்தின் இந்த அறிவிப்பு கௌரவ விரிவுரையாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. இதை எதிா்த்து, அவா்கள் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கல்லூரி நிா்வாகம் வாய்மொழியாகக் கூறிய அந்த உத்தரவை எழுத்துப்பூா்வமாகத் தர வேண்டும். தங்களுக்கு வழங்க வேண்டிய தொகுப்பூதியத்தையும், நான்கு மாத நிலுவை ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதுகுறித்து அறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் பழனி நேரில் வந்து விசாரித்தாா். பின்னா், கல்லூரி முதல்வா் நாகலட்சுமி, காவல் ஆய்வாளா் பழனி ஆகியோா் கௌரவ விரிவுரையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா்.
இதையடுத்து, கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் மாலை 4 மணியளவில் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...