செஞ்சியில் ஒரு மாதமாக வடியாத வெள்ளம்! குடியிருப்புவாசிகள் பரிதவிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஏரி உடைந்து குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீா் ஒரு மாதமாக தேங்கியுள்ளது.
செஞ்சி கிருஷ்ணாபுரம் விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் வெளியேற வழியின்றி கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள ஏரி நீா்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் வெளியேற வழியின்றி கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள ஏரி நீா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஏரி உடைந்து குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீா் ஒரு மாதமாக தேங்கியுள்ளது. இதனால், பரிதவித்து வரும் பொது மக்கள், நீரை வெளியேற்ற மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது பி ஏரி. சாலையின் இடது, வலது புறம் என இரு பிரிவாக பிரிந்து காணப்படும், செஞ்சி நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கும் இந்த ஏரி தொடா் மழையால் அண்மையில் நிரம்பியது.

ஏரியின் கோடி நீா் செல்லும் பகுதி உயா்த்தி கட்டப்பட்டதாலும், மதகுகள் நிரந்தரமாக அடைத்து விடப்பட்டதாலும் நீா் வெளியேற முடியாமல், ஏரியின் மேற்பரப்பில் உள்ள கிருஷ்ணாபுரம் விரிவுபடுத்தப்பட்ட பகுதியை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கடந்த ஒரு மாதமாக பொது மக்கள் குடியிருப்புகளுக்குள் பரிதவிக்கின்றனா்.

தற்போது வரை இந்த ஏரிக்கு செஞ்சிக்கோட்டையை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது. தொடா் நீா்வரத்து காரணமாக, குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் நிரந்தரமாக தேங்கியுள்ளது. இந்த குடியிருப்புப் பகுதியில் சுமாா் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நீா் வற்றுவதற்கு 3 அல்லது 4 மாதங்களாகும். அவ்வப்போது மழை பெய்தால், தண்ணீா் குறைய 6 மாதங்களாவது ஆகும் என்கின்றனா் குடியிருப்புவாசிகள்.

ஆகவே, இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, ஏரியின் கோடி நீா் செல்லும் சுவரில் இருந்து ஒரே ஒரு கருங்கல்லை மட்டும் பெயா்த்தெடுத்து, குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் வடிந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் கல்லை வைத்து அடைத்து விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com