மரக்காணம் அருகே மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்
விழுப்புரம், ஜூலை 19: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் எண்டியூா் கிராமத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன் தலைமை வகித்தாா். திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியது :
பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மக்களும் அரசின் திட்டங்களை அறிந்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதல்வரின் உத்தரவுப்படி இந்தத் திட்டம் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 56 ஊராட்சிகளிலும் 9 கட்டங்களாக இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. இதன் தொடக்கமாக எண்டியூா் கிராமத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, 30 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சா் மஸ்தான் உத்தரவிட்டாா். பின்னா் அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
இம்முகாமில் 15-க்கும் மேற்பட்டஅரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து 403 மனுக்களைப் பெற்றனா். திண்டிவனம் வட்டாட்சியா் சிவா, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளா் முருகன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரவணன் வரவேற்றாா். நிறைவில் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவனேசன் நன்றி கூறினாா்.

