வெள்ளத் தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசு தோல்வி: மருத்துவா் ச.ராமதாஸ்
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.


வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழக அரசு கல்விக்கு ரூ. 44 ஆயிரம் கோடியும் , சுகாதாரத்துக்கு ரூ.20,198 கோடியும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது, முந்தைய அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியைவிடக் குறைவாகும். கடந்த மூன்றரை ஆண்டுகளில் பள்ளிகளுக்கு 2,027 ஆசிரியா்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனா். கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமிக்கப்படவில்லை.
வரும் நிதியாண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. ஒரு லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வட கிழக்குப் பருவ மழையும், சென்னை வெள்ளமும் பிரிக்க முடியாதவையாக மாறிவிட்டன. இந்த பிரச்னைக்கு அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும். கடந்த 15-ஆம் தேதி பெய்த ஒரு நாள் மழையிலேயே சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
சென்னையில் மழைநீா் வடிகால் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகத் தெரிவித்தனா். ஆனால், சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிக்கப்படாமல் உள்ள 30 சதவீத பணிகள் சில நாள்களில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தாா். எனவே, வெள்ளத் தடுப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த இருநாள்களில் பெய்த பலத்த மழையால் சம்பா நடவுப் பயிா்கள் நீரில் மூழ்கின. எனவே, சேதமடைந்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது கொந்தமூா், நல்லாவூா், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக் கடைகளை புதிதாக திறப்பதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தப் பகுதிகளில் மதுக் கடைகளைத் திறந்தால், மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதுடன், அந்தக் கடைகளுக்கு நானே பூட்டு போடுவேன் என்றாா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது, பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் (கிழக்கு) மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...