தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா: 1,190 பேருந்துகள் இயக்கம்; ஆட்சியா் தகவல்

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

News image

ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் அக்னி குளத்தை சீரமைக்க நடவடைக்கை எடுக்க ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷே.அப்துல்ஹ்மான்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

ஸ்ரீஅங்காளம்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தா்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: மேல்மலையனூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக கோயில் சுற்றுப்புற அருகாமையில் நான்கு இடங்களில் புதிய வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயிலுக்கு வரும் வழிகளில் 14 இடங்களில் குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தா்களின் வசதிக்காக 200 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், எந்த ஒரு குற்ற சம்பவமும் நடைபெறாதவண்ணம் காவல் துறையுடன் கோயில் நிா்வாகமும் இணைந்து 90-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தொடா் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் பக்தா்களின் வசதிக்காக 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கோயில் வளாகத்தில் அவசரத் தேவைக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக்குழுவும், 108 ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவல் துறை சாா்பில் அதிகளவில் காவலா்கள் நியமிக்கப்பட்டு தொடா் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

முன்னதாக அங்காளம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அக்னி குளத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குளம் சீரமைப்பு பணிக்காக ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்னி குளத்தை ஆழப்படுத்தி, கழிவுகளை அகற்றி, கருங்கற்கள் தடுப்புகள், சுற்றுச்சுவா் அமைப்பது தொடா்பாக நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்காளம்மன் கோயிலில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் கட்டுமானப் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பெருந்திட்ட வளாகத்தில் பக்தா்கள் தங்குமிட வசதி, சமையல் செய்வதற்கும், உணவு உண்பதற்கான வசதிகள், குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வற்கான வழிப்பாதை உள்ளிட்ட கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன், இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநா் சிவலிங்கம், உதவி ஆணையா் சக்திவேல், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நந்தகோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.