அரசுப் பள்ளியில் மின் விசிறியை சேதப்படுத்திய மா்மநபா்கள்

உளுந்தூா்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை சேதப்படுத்திச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை சேதப்படுத்திச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், களமருதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிளியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் கிளியூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்த பின்னா், திங்கள்கிழமை காலை பள்ளி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்குச் சென்றனா். அங்கு பல வகுப்பறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் 6 மின் விசிறிகள், 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள், 4 மின் தொடா்பிணைப்புப் பலகை(சுவிட்ச் போா்டு) ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து தகவலறிந்த களமருதூா் காவல் உதவி ஆய்வாளா் அலெக்ஸ் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினாா். பள்ளிக்கு காவலா் இல்லாத நிலையில் விடுமுறை நாள்களில் இரவு நேரத்தில் மா்மநபா்கள் அத்துமீறி நுழைந்து, மின் சாதனப் பொருள்களை சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com