விவசாயம்

லாபம் தரும் திலேப்பியா மீன் வளர்ப்பு

தினமணி

நாமக்கல்: ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பில் திலேப்பியா மீன் வளர்ப்பதால், 6 மாதங்களில் ரூ.1.75 லட்சம் வருவாய் ஈட்டலாம். 
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா, பேராசிரியர் பால்பாண்டி ஆகியோர் கூறியதாவது:-
திலேப்பியா மீன்கள் எகிப்திய நாடுகளில், 4,000 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டன. திலேப்பியா இனங்களில், குறிப்பாக ஒரியோகுரோமிஸ் நைலோட்டிகஸ் என்னும் நைல் திலேப்பியா பல நாடுகளில் வளர்க்கப்பட்டு, அதிக அளவில் உணவாகப் பயன்படுகிறது.
அறிவியல் ரீதியில் முதன் முதலாக 1924-இல் கென்யாவில் திலேப்பியா வளர்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பல பகுதிகளுக்கு விரைவாக பரவியது. இந்தியாவில் 1952ல் திலேப்பியா மீன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மீனின் கட்டுப்படுத்த முடியாத இனப்பெருக்கத்தின் காரணமாக குளங்களில் திலேப்பியா மீன்களின் வளர்ச்சி தடைப்பட்டது. சந்தையில் இந்த மீன் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இதனை களை மீன் எனக் கருதி இந்தியாவில் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டது. இருந்தும் 1970-இல் நைலோடிகஸ் திலேப்பியா மீன் வளர்ப்போரால் மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ஹார்மோன்கள் மூலமாக அனைத்து மீன்களையும் பால் மாற்றம் செய்து ஆண் மீன்களாக உரு மாற்றம் செய்து வளர்க்கப்பட்டு, சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த மீன்கள் 5 மாதத்தில் ஒரு கிலோ வரை வளரும். இந்தியாவில் திலேப்பியா மீன் வளர்ப்பதற்கு அரசு சில விதிமுறைகளுடன் மீன் பண்ணையளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
திலேப்பியா மீன் வளர்ப்பதற்கான நெறிமுறைகள்: இந்திய வேளாண் துறை திலேப்பியா மீன் வளர்ப்பைக் கண்காணிக்க ஒரு வழிகாட்டிக் குழுவை அமைத்துள்ளது. விவசாயிகள் அல்லது மீன் பண்ணைத் தொழில் முனைவர்கள், திலேப்பியா மீன்களை இனப்பெருக்கம் செய்யவோ அல்லது குளங்களில் வளர்க்கவோ, மாநில மீன்வளத் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வளர்க்க வேண்டும்.
மீன் பண்ணைக்காகத் தேர்வு செய்யும் இடமானது கரடு முரடான பாறைகள், மேடு பள்ளங்கள், அடர்ந்த முள்செடிகள் இல்லாத இடமாக இருக்க வேண்டும். மீன் பண்ணை அமைக்க மிதமாக காற்று வீசும் பகுதிகளைத் தேர்வு செய்வது நல்லது.
மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் பண்ணைகள் அமைக்கக் கூடாது. மீன் பண்ணை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் முன் இடத்தின் அமைப்பு, நீர் மற்றும் மண்வளம், போக்குவரத்து வசதி, மின்சாரம், விற்பனை வசதி, பணியாட்கள் கிடைப்பது போன்றவற்றை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்.
வளர்ப்பு முறைகள்: ஹார்மோன்கள் முலமாக முற்றிலும் மலட்டுத் தன்மையாக்கப்பட்ட ஆண் மீன்கள் அல்லது இயற்கைச் சூழ்நிலையில் காணப்படும் நைலோட்டிகஸ் ஆண் மீன்களை மட்டும் வளர்க்க வேண்டும்.
குளத்தின் அளவு 0.1 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை இருந்தால் நல்லது. குளத்தின் உள்பகுதியை நோக்கியிருக்கும் சாய்வு, 2:1 முதல், 3:1 (உயரம்:அகலம்) என்ற விகிதத்திலும், வெளிப்புற சாய்வு, 1.5:1 முதல் 2.1 (அகலம்:நீளம்) என்ற விகிதத்திலும் அமைத்திருக்க வேண்டும்.
திலேப்பியா மீன்கள் பண்ணையிலிருந்து வெளிவராத வண்ணம், மீன் பண்ணையை அமைத்தல் வேண்டும். உள்மடை, வெளிமடையில் வலையைக் கட்ட வேண்டும்.
மேலும், பறவைகள் உட்புகாத வண்ணம் வலையினால் வேலியமைத்துப் பாதுகாக்க வேண்டும். வளர்ப்பு மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள், ஆறு, குளம் மற்றும் குட்டைகளில் சேராத வகையில் இருப்பதற்கு, சிறிய கண்ணியினால் ஆன பாதுகாப்புக் கதவை அமைக்க வேண்டும்.
குஞ்சுகளை இருப்பு செய்தல்: மீன் வளர்ப்புக் குளத்தைத் தயார் செய்தபின் வளர்ப்புக்கேற்ற மீன் குஞ்சுகளை (விரளவு குஞ்சுகள் 4-5 வாரங்கள்) வாங்கி வந்து வெப்பம் குறைவான நேரத்தில் (மாலை 6 மணி முதல், காலை, 7 மணி வரை) இருப்பு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேர் குளத்தில் 20,000 முதல், 50,000 வரை இருப்பு செய்யலாம்.
மீன் குஞ்சுகள், குளத்து நீரின் தன்மைக்கு இணங்கியதும் குளத்தில் உள்ள நுண்ணுயிர் மிதவைகளை உண்டு அவற்றின் இருப்பு மிகவும் குறைந்துவிடும் என்பதால், அவற்றுக்கு மேலுணவு தேவைப்படும்.
தவிடு பிண்ணாக்கு (3:1) விகிதத்தில் மீன்களின் மொத்த எடையின் அடிப்படையில் சமமாகக் கலந்து உருண்டைகளாக உருட்டி குளத்தின் மூலைகளில் உணவுத் தட்டுகட்டி அதில் வைக்க வேண்டும். மீன்களின் வளர்ச்சி, எடை ஆகியவற்றை அறிந்து அவற்றுக்கு ஏற்ப மீன்களுக்கு இட வேண்டிய உணவின் அளவை மாதாந்தோறும் உயர்த்த வேண்டும்.
வருமானம்: ஒரு ஹெக்டேர் குளத்தில் மீனின் பிழைப்பு திறன் 85 சதவீதம் இருக்கும். ஒரு கிலோ மீன் உற்பத்திக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை செலவு செய்தால், ஒரு கிலோ மீன் ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்லாம். 
ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் ஒரு ஹெக்டேர் மீன் வளர்ப்பு செய்வதன் மூலம் 6 மாதங்களில் கூடுதலாக ரூ.1.75 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT