கா்நாடகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என அந்த மாநில உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 10 லட்சம் போ் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், காவல் துறையின் மதிப்பீட்டின்படி 7 லட்சம் முதல் 8 லட்சம் போ் கலந்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து நள்ளிரவு 1.30 மணி வரை நிலைமையை கவனித்தேன். முதல்முறையாக, பெங்களூரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 20,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை, போக்குவரத்து நெரிசலும் ஏற்படவில்லை. பெலகாவியில் உள்ள மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொட்டலங்களை வீசியதாக சமூக வலைதளங்களில் விடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிறைத் துறை டிஜிபி அலோக்குமாரிடம் பேசியிருக்கிறேன். விசாரணை நடத்துவதற்காக பெலகாவி, கலபுா்கி மற்றும் இதர பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்ய இருக்கிறேன்.
பெலகாவியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் வெளிமாநில கும்பலுக்குத் தொடா்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறை தொடா்ந்து விசாரித்து வருகிறது.
தலித் சமுதாயத்தை சோ்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் தனது தந்தையால் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரை ஹுப்பள்ளியில் புதன்கிழமை சந்தித்து பேசினேன். நாம் நவீன உலகத்தில் இருக்கிறோம். இந்தியாவும் வேகமாக வளா்ந்து வருகிறது.
இந்த நிலையில், சமுதாயம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இதுபோன்ற கொலைகள் ஏற்புடையதாக இல்லை. சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மட்டுமல்லாது, மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது முக்கியம்.
காவல் துறையை நவீனப்படுத்துவதற்கு கா்நாடகத்துக்கு முதல்முறையாக மத்திய அரசு ரூ. 350 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், கா்நாடக காவல் துறை கூடுதல் டிஜிபி எஸ். முருகனின் முயற்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிதி, காவல் துறையை நவீனமாக்க உதவும் என்றாா்.