பெங்களூரு

மக்களவைத் தேர்தல்: பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்த்குமார் மனைவி போட்டி?

DIN

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய ரசாயனத் துறை அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், பெங்களூருவில் திங்கள்கிழமை மறைந்ததையடுத்து, 1996-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்த பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற விவாதம் பாஜகவில் தொடங்கியுள்ளது. அனந்த்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் அவரது மனைவி தேஜஸ்வினியை நிறுத்த வேண்டும் என்று கடந்த 3 மாதங்களாகவே பாஜக முன்னணித் தலைவர்கள் கட்சி மட்டத்தில் பேசி வந்தனர். இந்நிலையில், அனந்த்குமார் மரணம் அடைந்துள்ளதால் இந்தக் கருத்துக்கு கட்சியினரிடையே ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமையவிருப்பதால், அனுதாப அலை மூலம் தொகுதியைத் தக்கவைக்க அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று கட்சியின் முன்னணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனந்த்குமார் தொடங்கி நடந்திவந்த அதம்யசேத்தனா அறக்கட்டளை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவரது மனைவி தேஜஸ்வினிதான் கவனித்துவந்தார்.
சமூக சேவையில் தீவிரம் காட்டிவரும் தேஜஸ்வினி, இத்தொகுதியில் பிரபலமாக இருக்கிறார். 52 வயதாகும் தேஜஸ்வினிஅடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது, தனது கணவர் அனந்த்குமாரோடு இணைந்து அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தில் பணியாற்றியவர். அங்கு ஏற்பட்ட பழக்கத்தில்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பொறியியல் பட்டதாரியான தேஜஸ்வினி, விஞ்ஞானியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது தலைவர்களோடு நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
அனந்த்குமாரோடு இணைந்து தேர்தல் வேலைகளையும் கவனித்து வந்துள்ளார். அனுதாப அலை மட்டுமல்லாது, தனது சொந்த செல்வாக்கில் தேர்தலில் தேஜஸ்வினியால் வெற்றி பெற முடியும் என்று கட்சித் தொண்டர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தேஜஸ்வினியை தேர்தலில் நிறுத்துவதன் மூலம் பெண்களுக்கு போதுமான முக்கியத்துவம் தருவதில்லை என்ற குறையைப் போக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. அதம்யசேத்தனா அறக்கட்டளையின் விழாவில் பாஜக தேசிய, மாநிலத் தலைவர்களை அழைத்து, அவர்களின் அறிமுகங்களை பெற்றிருப்பதால் தேர்தலில் போட்டியிட எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT