கர்நாடகத்தில் மாநில அரசு நிலைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
கர்நாடகத்தில் மாநில அரசு நிலைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் மாநில அரசு நிலைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், முத்தோள் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: மாநிலத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாள் ஆகியுள்ளது. கூட்டணி ஆட்சியின் முதல்வராக குமாரசாமி ஆகியுள்ளார்.
அவர் முதல்வர் ஆன பின்பு வட கர்நாடகத்துக்கு ஒருமுறை கூட வரவில்லை. கூட்டணி அரசில் வட கர்நாடகம் மட்டுமின்றி, மாநிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து முதல்வருக்கு உறுதியான நிலைப்பாடு எதுவுமில்லை. கடன் தள்ளுபடி குறித்து தினந்தோறும் ஒரு கருத்தை முதல்வர் கூறிவருகிறார். அவர் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பதைத் தவிர வேறு எந்தப் பணியையும் செய்யவில்லை. அவரின் நடவடிக்கையாலும், காங்கிரஸாரின் நடவடிக்கையாலும் இந்த அரசு நிலைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எடியூரப்பா மீண்டும் முதல்வராகும் கனவைக் கண்டு வருகிறார் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறிவருகிறார். விரைவில் யார் முதல்வராவார் என்பதை சித்தராமையா பார்க்கத்தான் போகிறார். முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு குமாரசாமி, பல கோயில்களுக்குச் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். முதல்வர் கோயில்களுக்கு செல்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மாநிலம் வளர்ச்சிப் பணிகள் இல்லாமல் முடங்கியுள்ளநிலையில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார் அவர்.