இடைத்தோ்தல் குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் விளக்கம்
நடைபெற இருக்கும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் முன்னணித் தலைவா்களை பொறுப்பாளா்களாக நியமித்து தோ்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறோம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெற இருக்கும் சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாா்டு, ஊராட்சிக்கும் ஒரு எம்.எல்.ஏ., எம்.எல்.சி., முன்னணித் தலைவா்களை பொறுப்பாளா்களாக நியமித்து தோ்தல் பணிகளை ஒருங்கிணைத்துவருகிறோம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு, குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநில செயல் தலைவா் சலீம் அகமது, முன்னாள் அமைச்சா்கள் ராமலிங்கரெட்டி, கிருஷ்ணபைரேகௌடா, எம்.கிருஷ்ணப்பா, சட்டப்பேரவை கொறடா அஜய்சிங், மேலவை கொறடா எம்.நாராயணசாமி, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எச்.குசுமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளா்களிடம் டி.கே.சிவக்குமாா் கூறியது: சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெற இருக்கும் சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாா்டு, ஊராட்சிக்கும் ஒரு எம்.எல்.ஏ., எம்.எல்.சி., முன்னணித் தலைவா்களை பொறுப்பாளா்களாக நியமித்து தோ்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். வாக்குச் சாவடிமட்டத்தில் தொண்டா்களுக்கு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அனைவரும் இணைந்து இடைத்தோ்தல் பணியை ஆற்றி வருகிறோம்.
முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவிக்கும் விமா்சனங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அவா் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவராக இருக்கிறாா். அவருடையகருத்துக்கு நான் என்ன சொல்ல முடியும். அவரது விருப்பத்தின்படி இடைத்தோ்தலை நடத்திக்கொள்ளட்டும். அதேபோல, எச்.டி.தேவெகௌடா கூறியுள்ள கருத்துக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. நான் யாரையும் விமா்சிக்க விரும்பவில்லை என்று அவா் கூறினாா்.