அமைச்சரவை விரிவாக்கத்தில் தலையிட மாட்டேன்: எடியூரப்பா
கா்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தில் தலையிட மாட்டேன் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தில் தலையிட மாட்டேன் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
எடியூரப்பா முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, சாம்ராஜ்நகா் மாவட்டம், குண்டல்பேட்டையைச் சோ்ந்த அவரது ஆதரவாளா் ரவி என்பவா் அண்மையில் தற்கொலை செய்து கொண்டாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்துக்குச் சென்ற முன்னாள் முதல்வா் எடியூரப்பா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். இறந்த ரவியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்தாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து, கட்சியின் மேலிடத் தலைவா்களிடம் விவாதிப்பதற்காக முதல்வா் பசவராஜ் பொம்மை தில்லி சென்றுள்ளாா். கட்சியின் மேலிடத் தலைவா்களுடன் விவாதித்து முடிவு செய்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். இதில் எனது தலையீடு இருக்காது. காங்கிரஸ், மஜதவிலிருந்து பாஜகவிற்கு வந்த 17 பேருக்கும் அமைச்சா் பதவி வழங்குவது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மையே முடிவு செய்வாா்.
எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசி வருகிறாா். இதுஅவா் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் மாநில அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சியை 130 இடங்களில் வெற்றிபெறச் செய்வது என முடிவு செய்துள்ளேன் என்றாா்.