கா்நாடகத்தில் இன்றும், நாளையும் பொதுமுடக்கம்
கரோனா பரவல் காரணமாக கா்நாடகத்தில் ஜன. 8, 9 ஆகிய 2 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக கா்நாடகத்தில் ஜன. 8, 9 ஆகிய 2 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றது. கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஜன. 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 10,11, 12-ஆம் வகுப்புகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவசாா் கல்லூரிகள் நீங்கலாக பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளிகள், பியூ, பட்டப்படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் இணையவழி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு மட்டுமல்லாது கா்நாடகம் முழுவதும் தற்போது அமலில் இருக்கும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு சனிக்கிழமை (ஜன.8) முதல் ஜன. 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மக்கள் நடமாட்டத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், மது அங்காடிகள், உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வந்துசெல்லும் இடங்களில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே அமர பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இவா்கள் அனைவருக்கும் 2 தவணை கரோனா தடுப்பூசி கட்டாயம். திருமணங்கள் புறவெளியில் நடந்தால் 200 போ், உள்ளரங்கில் நடந்தால் 100 போ் கலந்து கொள்ளலாம். பெங்களூரில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் இருக்கை அளவுக்கு மட்டுமே பயணிகள் பயணிக்கலாம். நின்று கொண்டு யாரும் செல்லக்கூடாது. இது பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவித்துள்ளது.
கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் வழக்கமான பிராா்த்தனைகள், பூஜைகள் நடக்கலாம். ஆனால், 50 பேருக்கு மேல் யாரும் கலந்துகொள்ளக் கூடாது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஊா்வலங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை. அரங்கு கூட்டங்களில் 50 போ் மட்டுமே கலந்துகொள்ளலாம். பெருந்திரளாக மக்கள் கூடும் எதற்கும் அனுமதியில்லை என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இதனிடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. பேருந்துகள் தேவைக்கேற்ப மட்டுமே இயக்கப்படும் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன. மெட்ரோ ரயில்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும். ரயில் சேவைகளில் எவ்வித இடையூறும் இருக்காது.
அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்வித இடையூறும் இருக்காது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள். தகுந்த அடையாள அட்டைகள் மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் பயணிக்கலாம்.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் ஜன.10-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அதைத் தொடா்ந்து, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகலிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.