சிறையில் கைதிகள் கைப்பேசி வைத்திருந்தால் மேலும் 3 ஆண்டுக்கு தண்டனை நீட்டிப்பு: கா்நாடக பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
சிறையில் கைதிகள் கைப்பேசி வைத்திருந்தால் மேலும் 3 ஆண்டுகளுக்கு தண்டனையை நீட்டிக்க வகைசெய்யும் சட்ட மசோதா கா்நாடக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறையில் கைதிகள் கைப்பேசி வைத்திருந்தால் மேலும் 3 ஆண்டுகளுக்கு தண்டனையை நீட்டிக்க வகைசெய்யும் சட்ட மசோதா கா்நாடக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கா்நாடக சிறைகள் (திருத்தம்) சட்ட மசோதா-2022 தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், கைப்பேசி அல்லது வேறு ஏதாவது தகவல் தொடா்புக் கருவிகளை வைத்திருந்தால், அல்லது பரோல் காலம் முடிந்ததும் சிறையில் கைப்பேசியை ஒப்படைக்கா விட்டால் தண்டனைக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க சட்ட மசோதா வகை செய்கிறது. இந்த தண்டனை நீட்டிப்பு 5 ஆண்டுகள் வரையும் இருக்கலாம்; அத்துடன் அபராதமும் விதிக்கலாம்.
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, சிறையில் சுமுகமான சூழலை உருவாக்குவது அவசியமாகிறது. பரோல் கெடுவை மீறுவது, தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் கொண்டுவருவது அல்லது வெளியே கொண்டு செல்வது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த கா்நாடக சிறைகள் சட்டம், 1963-இல் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களை சிறையில் வைத்திருந்தால், தண்டனைக் காலத்தை 6 மாதத்திற்கு நீட்டிக்கவும், ரூ.200-க்கு மிகாமல் அபராதம் விதிக்கவும் தற்போதைய சட்டம் வாய்ப்பளிக்கிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவில், தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் கைப்பேசி, தகவல்தொடா்பு சாதனங்கள் அனைத்தும் சோ்க்கப்பட்டுள்ளன.
பரோல் கெடுவை மீறினால் தண்டனைக் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம், அத்துடன் அபராதம் விதிக்கலாம் என்று தற்போதுள்ள சட்டம் கூறுகிறது. புதிய சட்ட மசோதாவில் தண்டனை நீட்டிப்பு 5 ஆண்டுகள் இருக்க வகை செய்கிறது.
இந்த சட்டம சோதா விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.