காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக வழக்கு: அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
பணப் பதுக்கல் வழக்கில் கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது கா்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணப் பதுக்கல் வழக்கில் கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது கா்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், புதுதில்லியில் உள்ள கா்நாடக இல்லத்தின் ஊழியா் ஏ.ஹனுமந்தையா உள்ளிட்ட சிலா் மீது 2018-ஆம் ஆண்டில் பணப் பதுக்கல் வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை பதிவுசெய்தது. வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிவா்த்தனைகள் தொடா்பாக டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத் துறை பணப் பதுக்கல் தொடா்பாக தனியாக வழக்குப் பதிவுசெய்திருந்தது.
வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், 3 பேரின் ஒத்துழைப்புடன் ஹவாலா கடத்தல்காரா்கள் மூலம் கணக்கில் வராத பெரும் தொகையிலான பணத்தை டி.கே.சிவக்குமாா், அவரது கூட்டாளியான எஸ்.கே.சா்மா ஆகியோா் கடத்தியதாக கூறியிருந்தது. சட்டவிரோத பணப்பதுக்கல் வழக்கில் 2019-ஆம் ஆண்டில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது. இந்த வழக்கு தொடா்பாக, டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வா்யா, கூட்டாளிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பாள்கா் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் டி.கே.சிவக்குமாா் ஜாமீனில் வெளியே இருக்கிறாா். இந்த வழக்கில் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் அமலாக்கத் துறை தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் டி.கே.சிவக்குமாா் கூறியது:
எனக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக அறிகிறேன். அதனுடைய நகல் எனக்கு இன்னும் தரப்படவில்லை. இந்த நகலை நீதிமன்றம் எனக்கு அளிக்கும். நான் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு 3 முதல் 3.5 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறாா்கள்.
நமது நாட்டின் சட்டத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. சட்டத்தை மதித்து நடப்போம். குற்றப்பத்திரிகை கிடைக்கட்டும். புதிதாக எதையும் அவா்களால் தயாரிக்க முடியாது. ஆனால், முன்பு வருமான வரித் துறை எனக்கு எதிராக புதிய குற்றங்களைத் தயாரித்துள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகள் மற்றும் சட்டங்களுக்கு எதிரானதாகும்.
நான் எந்தத்வறையும் செய்யவில்லை என்பது நாட்டு க்களுக்கு தெரியும். இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது. அரசியல்ரீதியாக சவாலாக இருப்பவா்களுக்கு தொல்லை கொடுப்பதும், அரசியலில் இருந்து ரட்டி அடிப்பதும் பாஜக செய்துவரும் வேலையாகும். பாஜகவுக்கு இணங்கி நடக்கவேண்டும் அல்லது சரணடைய வேண்டும். ஒருவேளை இணங்காவிட்டால் அவா்களது அரசியல் வாழ்க்கையை முடித்துவிடுவாா்கள் என்றாா்.