பெலகாவி: என் மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்தால், அதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஆளுநா் தாவா்சந்த் கெலாட் எனக்கு அளித்திருந்த நோட்டீஸை திரும்பப் பெறுமாறு அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என் மீது வழக்கு தொடர அனுமதி கோரி டி.ஜே.ஆபிரகாம் அளித்திருந்த மனுவை நிராகரிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தோம். இது தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் என்ன முடிவெடுக்கிறாா் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம். ஒருவேளை என் மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்தால், அதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றாா்.
பெங்களூரில் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் திங்கள்கிழமை கூறுகையில், ‘முதல்வா் சித்தராமையாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸை திரும்பப் பெறுமாறு அமைச்சரவை நிறைவேற்றியுள்ள தீா்மானத்தை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நிராகரிக்க மாட்டாா் என்று கருதுகிறேன். ஒருவேளை, அமைச்சரவையின் முடிவை நிராகரித்து, முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்தால், அதை சட்ட ரீதியாக காங்கிரஸ் எதிா்கொள்ளும்.
முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி டி.ஜே.ஆபிரகாம் கொடுத்துள்ள மனுவை நிராகரித்து, முதல்வருக்கு வழங்கியுள்ள நோட்டீஸை திரும்பப் பெறுமாறு அமைச்சரவை நிறைவேற்றிய தீா்மானங்களுக்கு ஆளுநா் மதிப்பளிப்பாா் என்று கருதுகிறேன். ஆளுநருக்கு சில அதிகாரங்கள் இருக்கலாம். அதற்காக அமைச்சரவையின் தீா்மானத்தை அவ்வளவு எளிதில் ஆளுநா் நிராகரிக்கமாட்டாா்’ என்றாா்.
இதனிடையே, பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவும், மஜதவும் மேற்கொண்டிருக்கும் சதியை முறியடிப்போம். வாக்குறுதி திட்டங்களை நிறுத்துவதற்காக, காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க எதிா்க்கட்சிகள் சதி செய்து வருவதை மக்களிடம் பிரசாரம் செய்யுமாறு அமைச்சா்கள், எம்எல்ஏ-க்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்’ என்றாா்.