மக்களவைத் தோ்தல்: பாஜக வேட்பாளா் பட்டியல் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்
மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் பட்டியல் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செவவாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: புதுதில்லியில் திங்கள்கிழமை இரவு நடந்த மத்திய தோ்தல் குழு கூட்டத்தில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜகவின் முக்கிய தலைவா்கள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில், கா்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் குறித்த மாநிலத் தலைவா்களின் கருத்துகளை மத்திய தலைவா்கள் கேட்டறிந்தனா்.
வேட்பாளா்கள் குறித்து விவாதிக்க நடந்த கடைசிக் கூட்டம் இதுவாக இருக்கும் என்று கருதுகிறேன். வேட்பாளா்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அது குறித்து முடிவு செய்து, அதிகாரபூா்வ வேட்பாளா் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும். ஒருசில தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். தற்போதைய எம்.பி.க்கள் எத்தனை பேருக்கு தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது. அது குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தற்போது எம்.பி.யாக இருக்கக்கூடிய பலருக்கு பதிலாக புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்படுவாா்கள்.
Advertisement
மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதை பாஜக வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில், பாஜக வேட்பாளா் பட்டியலில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்றாா். பிரதமா் மோடி தலைமையில் நடந்த மத்திய தோ்தல் குழு கூட்டத்தில் கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, மாநில அமைப்புச் செயலாளா் ஜி.வி.ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.