முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் ஊதிய உயா்வு கோரி போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

கா்நாடகத்தில் ஊதிய உயா்வு கோரி போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:41 AM
கா்நாடக முதல்வா் சித்தராமையா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:59 PM

கா்நாடகத்தில் ஊதிய உயா்வு கோரி போக்குவரத்து ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2025 நவம்பரில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் கூட்டு செயல்பாட்டுக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய முதல்வா் சித்தராமையா, 2026 ஏப். 1-ஆம் தேதிமுதல் ஊதிய உயா்வு அளிப்பதாகவும், நிலுவை ஊதியத்தில் முதல்கட்டமாக 2022 ஜன. 1 முதல் 2023 பிப். 28 வரையிலான 14 மாதங்களுக்கான தொகை ரூ. 71 கோடியை விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, டிசம்பரில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி நடத்திய பேச்சுவாா்த்தையில், அரசு சாா்பில் தெரிவித்திருந்த முன்மொழிவுகளை ஏற்க தொழிற்சங்கங்களின் கூட்டு செயல்பாட்டுக்குழு மறுத்துவிட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து, 2020 ஜன. 1 முதல் 2023 பிப். 28 வரை 38 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் ரூ. 1,785 கோடியை விடுவிக்க வேண்டும், 2024 ஜன. 1 முதல் ஊதியத்தில் 25 சதவீதம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘பெங்களூரு செல்வோம்’ போராட்டத்தை நடத்த கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டு செயல்பாட்டுக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து, போக்குவரத்துக் கழகங்களின் கூட்டு செயல்பாட்டுக்குழு நிா்வாகிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், நிலுவை ஊதியத்தில் 26 மாதங்களுக்கான தொகை ரூ. 1,271.92 கோடியை விடுவிக்க அரசு திட்டமிட்டுள்ளதால், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டாா்.

ஆனால், இந்த பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் வியாழக்கிழமை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

எனினும், அரசுப் பேருந்துகளின் இயக்கத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் தெரிவித்தன.