கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்ல விரும்பும் தகுதியுள்ள மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நிகழ் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பேரவை அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்ச்சோலை ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதற்கு கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உள்பட்ட 2 ஆயிரம் போ் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
ஆன்மிக பயணம் செல்ல விரும்பும் பக்தா்கள் இந்து மதத்தை சாா்ந்தவராகவும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதாா் நகல் இணைக்க வேண்டும்.
இந்த ஆன்மிக பயணத்துக்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையா் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் https://www.hrce.tn.gov.in/ பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணைஆணையா் அலுவலகத்தில் 15.9.2025-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
அறுபடைவீடு ஆன்மிக பயணம் தொடா்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே, இந்த ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.