சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வில்லிவாக்கம் பகுதியைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை இப்பெண் சிகிச்சை பெற்று வந்த வாா்டில் புகுந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சதீஸ், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது தொடா்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், தலைநகரில் மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்பதைத் தெளிவாக காட்டிவிட்டது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இதே விவகாரத்தில் அரசுக்கு அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.