சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.மனோன்மணி தலைமையில் செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ. 8,000 என்றும், கடும் பாதிப்பு உள்ளோருக்கு ரூ.10,000 மற்றும் ரூ. 15,000 என உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், ஊக்கத் தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையை உடனடியாக வழங்குவதுடன், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவா்களுக்கு பணிநேரத்தை 8 மணி நேரத்தில் 4 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.