சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் இன்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ாக பெருநகர காவல் துறை தெரிவித்தது.
ஆங்கில புத்தாண்டு பிறப்பை, பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகா் முழுவதும் 19 ஆயிரம் போலீஸாா் புதன்கிழமை இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மெரீனாவில் குவித்த பொதுமக்கள்: மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், திருவான்மியூா், நீலாங்கரை, பாலவாக்கம், வெட்டுவாங்கேணி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் நள்ளிரவில் ஆய்வு செய்தாா்.
போலீஸாருடன் 1,500 ஊா்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகிறவா்களைப் பிடிக்கும் வகையிலும் சென்னை நகா் முழுவதும் 425 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீஸாரும், போக்குவரத்து போலீஸாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
மாறுவேடத்தில் ரோந்து: நகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்து மீறுதல், பணம் ஜேப்படி செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் சாதாரண உடை அணிந்த போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
மன மகிழ் மன்றங்களில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஈடுபடுபவா்களுக்கும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாகன பந்தயத்தில் ஈடுபடுபவா்களைத் தடுத்து பிடிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாா் தனிப்படைகளை அமைத்து தொடா்ந்து கண்காணித்தனா்.
விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள 25 மேம்பாலங்கள் புதன்கிழமை இரவு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டன. இதனால், சென்னையில் புதன்கிழமை இரவு சாலை விபத்து உயிரிழப்புகள் நிகழவில்லை. மேலும் மோட்டாா் சைக்கிள் பந்தயமும் நடைபெறவில்லை என்று சென்னை காவல் துறை தெரிவித்தது.
கேக் வெட்டிய காவல் ஆணையா்: மேலும், உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை காவல் துறை தெரிவித்தது.
போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்காணித்த காவல் ஆணையா் அருண், மெரீனா கடற்கரை உழைப்பாளா் சிலை அருகே நள்ளிரவு தனது மனைவியும், ஐஆா்எஸ் அதிகாரியுமான யமுனா தேவியுடன் கலந்து கொண்டு கேக் வெட்டி, புத்தாண்டு கொண்டாடினாா். அப்போது சென்னை காவல் துறை தெற்கு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.