முகப்பு
சென்னை

50 அடி வடிகால் 5 அடியாக குறைவு

சென்னை, அக். 18:   சென்னை முகப்பேரில் சிலர் மழை நீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை பருவமழை தொடங்கும் முன் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அம்பத்தூர் தொழிற்பேட்

சென்னை

50 அடி வடிகால் 5 அடியாக குறைவு

சென்னை, அக். 18:   சென்னை முகப்பேரில் சிலர் மழை நீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை பருவமழை தொடங்கும் முன் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அம்பத்தூர் தொழிற்பேட்

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:59 PM
பகிர்:

சென்னை, அக். 18:   சென்னை முகப்பேரில் சிலர் மழை நீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை பருவமழை தொடங்கும் முன் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியிலிருந்து மழை நீரை வெளியேற்ற சிட்கோவுக்கு சொந்தமான வடிகால் ஒன்று உள்ளது. தொழிற்பேட்டையில் தொடங்கி பாடி, டி.எம்.பி. நகர், சீனிவாசா நகர், அக்ஷயா காலனி, ஆபிசர்ஸ் காலனி, டி.வி.எஸ். காலனி, டி.வி.எஸ். அவென்யூ ஆகிய பகுதிகளைக் கடந்து அந்த வடிகால் பாடி புதுநகர் கால்வாயில் சேர்கிறது. இந்த பகுதிகள் முழுவதும் அம்பத்தூர் நகராட்சி எல்லையில் உள்ளன.

  மழை நீர் வடிகாலாக மட்டுமின்றி, இந்த ஒட்டுமொத்த பகுதிகளின் கழிவுநீரும் இந்த வடிகால் வழியாகவே வெளியேறுகிறது. 30 ஆண்டுகளுக்கும் முன் சுமார் 50 அடி அகலத்தில் இருந்த இந்த வடிகால் இப்போது வெறும் 5 அடி அகலம் கூட இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அரசியலில் அதிகாரம் மிக்க பலர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர்.

  பல இடங்களில் தனியாரின் காம்பவுண்டுக்குள்ளும், ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டப்பட்ட வெவ்வேறு நபர்களின் வீடுகளுக்கு இடையேயும் இந்த வடிகால் ஓடுகிறது.

வீடுகளுக்குள் தண்ணீர்:    கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது சிட்கோ வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக வெள்ள நீர் வடிய முடியவில்லை. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் வடிகால் செல்லும் பகுதிகள் முழுவதும் பல நாட்கள் வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தன.

  வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் செயலிழந்து போயின. பல நாட்கள் தண்ணீர் வடியாமல் தேங்கியிருந்ததால், அப்பகுதிகள் முழுவதும் தூர்நாற்றம் வீசியது. பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.

  ஆபிசர்ஸ் காலனி பகுதியில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளும் இந்த பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை.

  வெள்ள நீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகமோ, அரசுத் துறைகளோ நடவடிக்கை எடுக்காததை ஒட்டி அப்பகுதி பொதுமக்களே திரண்டு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  அதன் பிறகே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்போது உறுதி அளித்தனர்.

ஆக்கிரமிப்பு தொடர்கிறது:    ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என ஆபிசர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  இதற்கிடையே இன்னும் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டின் மோசமான அனுபவத்தால், மழைக்காலம் என்றாலே இப்போது முகப்பேர் பகுதி மக்களிடம் அச்சம் மேலோங்கியுள்ளது.

  இது சிட்கோவுக்கு சொந்தமான வடிகால் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனக் கூறப்படுகிறது.

  இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பழனிக்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியது:

  இப்பிரச்னை தொடர்பாக சிட்கோ அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகிறோம். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  இது குறித்து சிட்கோ உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ""வடிகாலை அகலப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்பட அனைத்து பணிகளையும் விரைவில் செய்து முடிப்போம்'' என தெரிவித்தனர்.

  ஆக, இப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தமிழக அரசின் அனுமதியைப் பொருத்தே உள்ளதாக தெரிகிறது. பல லட்சம் பொதுமக்களை பருவமழையின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →