சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் 14 ஆயிரம் பேர்!
சென்னை, டிச. 29: தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி, உயிரிழப்பது அதிகரித்துள்ளது. போலீஸôரின்
சென்னை, டிச. 29: தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி, உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
போலீஸôரின் குற்றப்பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 60,794. இதில் உயிரிழந்தோர் 12,727 பேர். ஆனால், இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டில் சாலை விபத்துகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வரை மட்டுமே 54,870 விபத்துகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் வரை நடந்த விபத்துகளை விட குறைவாகும். ஆனால், இதில் உயிரிழந்தோர் 13,085 பேர். காயமுற்றோர் 5,719 பேர். டிசம்பர் மாத புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தையும் தாண்டக் கூடும் என்று தெரியவந்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு வாகன விபத்துகளில் 582 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் இது மேலும் அதிகரித்துள்ளது.
வாகன ஓட்டுநர்களால்...
பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புக்குக் காரணம் ஓட்டுநர்களின் கவனக் குறைவே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் ஓட்டுநர்களின் கவனக் குறைவால் மட்டும் ஏற்பட்ட 10,990 விபத்துகளில், இதுவரை 11,920 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
எனவே, ஓட்டுநர்களுக்கு விபத்தின்றி வாகனங்களை ஓட்டுவது குறித்தும், சாலை விதிகள், முதலுதவி சிகிச்சை குறித்தும் தொடர்ந்து தீவிர விழிப்புணர்வு பிரசாரம்,பயிற்சிகளை வழங்குவது மிகவும் அவசியமாகிறது.
அரசு வாகனங்களால் விபத்து:
தனியார் வாகனங்களை விட அரசு வாகனங்களால் விபத்துகள் அதிகரித்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களால் நேரிட்டுள்ள 1,187 விபத்துகளில் 1,299 பேர் பலியாகியுள்ளனர்.
ஆம்னி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் சிக்கி 845 பேர் பலியாகியுள்ளனர். இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
கொலைக் களமாகும் மோசமான சாலைகள்:
பராமரிக்கப்படாத குண்டும் குழியுமாக உள்ள மோசமான சாலைகள், மரணப் படுகுழிகள், பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இத்தகைய காரணங்களால் மட்டும் இந்த ஆண்டு 150 பேர் இறந்துள்ளனர்.
இதுதவிர மோசமான காலநிலையாலும், இரவு நேரத்திலும் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களிலும் மோதி விபத்தில் சிக்கி அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நேரிடும் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,670 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல மாவட்ட, கிராமப்புற சாலைகளில் நடக்கும் விபத்துகளில் 3,400 பேர் பலியாகியுள்ளனர்.
வாகனங்களின் பெருக்கம்:
தமிழகத்தில் இப்போது இயக்கத்தில் உள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருசக்கர வாகனங்கள், கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சாலை வசதிகளை விரிவாக்கம் செய்வதோடு, சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
தலைக்கவசம் சுமையா?
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போது 90 சதவீதம் பேர் விபத்தில் சிக்குகின்றனர்.
எனினும், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மக்களிடையே இன்னமும் போதிய அளவில் சென்று சேரவில்லை.
சட்டத்தை அமலாக்கும் அரசுத் துறையினரும் மக்களின் நம்பகத் தன்மையைப் பெறுவதில் தேக்கநிலை உள்ளது.
இந்த நிலையில், சாலை விபத்துகளில் சிக்கி இழப்பைச் சந்திக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. பெரும்பாலான வழக்குகளில் தீர்வு கிடைப்பதிலும் தாமதம் தொடர்கிறது.