வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியைத் தடுக்க ஒற்றைச் சாளர முறை கொண்டுவரப்படுமா?
சென்னை, ஜூன் 2: வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியைத் தடுக்க, விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடிய ஒற்றைச் சாளர முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று அத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்ற
சென்னை, ஜூன் 2: வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியைத் தடுக்க, விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடிய ஒற்றைச் சாளர முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று அத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
படித்து முடித்தவுடன் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோகம் இளைஞர்களை ஆட்கொள்கிறது. இவர்களைப் போல் போதிய படிப்பு இல்லாதவர்கள் குவைத், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கீழ்த்தட்டு பணிகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மோகம் கொண்டுள்ளனர்.
இவர்களின் கண்மூடித்தனமான மோகத்தால், நாளுக்கு நாள் போலி வேலைவாய்ப்பு முகவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டபோதும், போலி முகவர்களிடம் லட்ச லட்சமாய் பணத்தைக் கொடுத்து, ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Advertisement
""சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகத்துக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, போலி முகவர்கள் மூலம் ஏமாந்ததாக 10 முதல் 15 புகார்கள் வருகின்றன. இது தவிர காவல் நிலையங்களில் தனிப்பட்ட முறையில் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதில் ஒரு சிலர் மட்டுமே பணத்தை திரும்பப் பெறுகின்றனர். பலர் பல ஆண்டுகளாகியும் பணத்தைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்'' என்கிறார் குடியுரிமை பாதுகாவலர் ஜெய்சங்கர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
பதிவு செய்துள்ள முகவர், வெளிநாட்டு நிறுவனப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு, குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும். அப்போது வெளிநாட்டில் எந்த நிறுவனத்துக்கு அவர் ஆட்களைத் தேர்வு செய்கிறார், எவ்வளவு பணியிடங்களுக்கு தேர்வு செய்கிறார் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களின் உண்மை நிலையைக் குடியுரிமை பாதுகாவலர், அந்தந்த நாடுகளுக்குத் தொடர்பு கொண்டு சரிபார்ப்பார். அதன் பிறகு முகவருக்கு அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் இப்போது குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகத்திலேயே பாதுகாத்து வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் போலி முகவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, குடியுரிமை பாதுகாவலர் மூலம் திரட்டப்படும் தகவல்களை, இணைய தளத்தில் வெளியிடும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
இதன் மூலம், முகவர் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனம் உண்மையில் உள்ளதா? எவ்வளவு பணியிடங்கள் உள்ளன? பணியாளர்களைத் தேர்வு செய்ய எத்தனை முகவர்களை அந்த நிறுவனம் அனுமதித்துள்ளது? சம்பந்தப்பட்ட முகவர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனரா என்கிற விவரங்களை வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
பதிவு செய்த முகவர்களின் பெயர், பதிவு எண் ஆகியவை இப்போது இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் முகவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதிக் காலம் எவ்வளவு உள்ளிட்ட அவர் குறித்த அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், போலி முகவர்களின் நடமாட்டம் தடுக்கப்படுவதோடு, மக்கள் ஏமாறுவதும் குறையும் என்றார் ஜெய்சங்கர்.