கழிவுநீர், குப்பைகளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை
திருவொற்றியூர், மே.15: வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர் வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் கடற்கரை கிராமங்களாக இர
சென்னைகழிவுநீர், குப்பைகளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை
திருவொற்றியூர், மே.15: வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர் வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் கடற்கரை கிராமங்களாக இர
திருவொற்றியூர், மே.15: வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர் வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
ஒரு காலத்தில் கடற்கரை கிராமங்களாக இருந்த மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னைபட்டணம், வண்ணையம்பதி, திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் இன்று சென்னை மாநகராக மாறியுள்ளது. நாகரிகம், அறிவியல் வளர்ச்சியால் கடற்கரை கிராமங்கள் மாநகராக உருமாறி விட்டன.
சிறு படகு துறையாக இருந்த மெரினா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் மூச்சு வாங்கும் இடமாக மெரினா மாறிவிட்டது என்றே கூறலாம். பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கடற்கரையும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழக அரசு மெரினாவை அழகுபடுத்த, பராமரிக்க என ஆண்டுதோறும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. தென் சென்னையில் வசிப்போர் மெரினாவில் காலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதை தனி சுகமென கருதுகின்றனர்.
கடலரிப்பில் காணாமல் போன கோயில்:
ஆனால் வடசென்னையில் உள்ள நீண்ட கடற்கரை பகுதி தற்போது குப்பை கொட்டும் இடங்களாகவும கழிவு நீர் வடிகால்களாவும் மாறி வருவதை அரசு கண்டும் காணமால் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன. மேலும் காசி விஸ்வநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணற்பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு அழகு சேர்த்தன. ஆனால் சென்னைத் துறைமுக விரிவாக்கப் பணிகளால் ஏற்பட்ட கடலரிப்பால் வடசென்னை கடற்கரையின் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலத்தை கடல் காவு கொண்டு விட்டது. இதில் கடலில் மூழ்கிய சிறப்பு மிகுந்த காசி விஸ்வநாதர் கோவிலும் அடக்கம்.
கடலில் கலக்கும் கழிவுநீர்:
மணலி,எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட உரம், ரசாயனம் தயாரிக்கும் கனரக ஆலைகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீர், திருவொற்றியூர், எண்ணூர் நகராட்சிகளில் கழிவு நீரும் கடலில்தான் கலக்கின்றன. இதனால் கழிவுநீர் கலக்கும் பகுதியில் மக்கள் நடமாடமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான். கடலில் தொடர்ந்து கலந்து வரும் ரசாயனக் கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பெருமளவு குறைந்துபோய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குப்பை கொட்டுமிடம்:
சென்னை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூரில் உள்ள வளாகத்தில் கொட்டப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாவு மில்கள் போன்றவற்றில் வெளியேற்றப்படும் குப்பைகள் எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச் சாவடி கடற்கரை அருகே கொட்டப்படுகின்றன.
இதில் இரவு நேரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் அப்போதே தீவைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகைமண்டலத்தால் வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். காசிமேடுமுதல் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம்வரை குப்பைகளால் பல இடங்களில் மலைக்குன்றுகள் தோன்றியுள்ளதைக் காணலாம்.
திருவொற்றியூர் கடற்கரையிலும் இதேபோல் தொடர்ந்து குப்பைகள் கடற்கரையில் கொட்டப்படுகின்றன. திருவொற்றியூர் கடற்கரை, சுங்கச் சாவடி ஆகிய இடங்களில் புறக்காவல் நிலையங்கள் இருந்தும் குப்பை கொட்டுவதைத் தடுப்பது தங்கள் வேலை அல்ல என போலீஸôரும் கண்டு கொள்வதில்லை.
சமூக அமைப்பு கோரிக்கை:
இது குறித்து திருவொற்றியூர் சமூக சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வரன் கூறியது:
"வடசென்னையில் நீண்ட நெடிய கடற்கரை கடலரிப்பால் பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளதால் கடற்கரை நெடுகிலும் மணல் குவிந்துள்ளது.
ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் கடற்கரை பகுதி கடுமையாக மாசடைந்து உள்ளது. பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும் வடசென்னையில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை.
துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்திற்காக கடலோர மீனவ மக்கள் அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனவே சாலைத் திட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவேறும் என உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வட சென்னை கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இதன்மூலம் மெரினா போல் இப்பகுதியும் அழகாக மாறும். முதற்கட்டமாக் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் உடனடியாக தடுக்க வேண்டும்' என்றார் கோட்டீஸ்வரன்.
வடக்கு தேய்கிறது: தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது என்ற கோஷத்தை கடந்த சில ஆண்டுகளாக வடசென்னைவாசிகள் ஓங்கி ஒலிக்கும் நிலையில் வடசென்னை கடற்கரையை
அழகுபடுத்தும் முயற்சிகளை அரசு உடனே துவங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.