நூலகம் எனும் மனநல மருந்தகம்
இந்த இருபத்தோராம் நூற்றாண்டு நமக்கு தகவல் தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றத்தையும், கூடவே கணிசமான மன அழுத்தத்தையும் கொண்டு வந்திருக்கிறது. குடும்ப நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. ஆண்களும் பெண்களும
இந்த இருபத்தோராம் நூற்றாண்டு நமக்கு தகவல் தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றத்தையும், கூடவே கணிசமான மன அழுத்தத்தையும் கொண்டு வந்திருக்கிறது. குடும்ப நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. ஆண்களும் பெண்களும் கை நிறைய சம்பாதிப்பதோடு மட்டுமல்ல, மண வாழ்க்கையில் அதிகம் பிரிந்தும் வருகிறார்கள். சம்பளக் கவரும் மனசும் ஒன்றாக கனத்து வருகிறது. எங்கே,எதில் குறைபாடு?
தொழில்நுட்பத்தை பயின்ற அளவுக்கு வாழ்க்கையின் நுணுக்கத்தை கற்க இயலாமல் போனதின் விளைவோ... வெறும் பணம் பண்ணுகிற கல்விமுறை வாழும் கலையை வெகுதொலைவுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. சிறார்களும் இன்று அதிகம் உபயோகிக்கிற சொல் "டென்ஷன்'. இந்த மன இறுக்கம் இறுக்கிப் பிடிக்காத மனிதர்கள் இன்று மிகக் குறைவு. இந்த சூழ்நிலையில் மனிதர்களுக்கு மாமருந்தாக இருப்பவை நல்ல நூல்களே.
நூலகத்தில் நிரம்பியிருப்பது வெறும் அச்சடித்த காகிதங்களல்ல. மானுடத்தின் மீது காதல் கொண்டு ஆத்மாவை அரவணைத்துச் சென்றவர்களின் மகத்தான சாசனங்கள். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே... என்கிற கீதையின் உபதேசம் கால நதியில் வாழ்க்கைப் படகின் பயணத்தை எவ்வளவு லேசாக்குகிறது.
அன்றைய வேளைக்கான அரிசியினை முற்றத்தில் இறைத்துவிட்டு, ""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பரவசமாய்ப் பாடும் பாரதி நமக்கு எவ்வளவு திகைப்பூட்டுகிறான்! கூடவே பொருளற்ற நம் சோகங்களையும் கலைத்துவிடுகிறானே நம் கவி! என் உயரத்திலிருந்து தெரிகிற என் வாழ்க்கையில் களிப்பு குறைவுதான். ஆனால் பாரதியின் தோளில் அமர்ந்தபடி வசனகவிதையை செவிமடுத்தபடி பார்க்கிற சாதாரண சூரிய அஸ்தமனம்கூட குதூகலத்தைக் கொண்டுவருகிறதே. பாரதி சொல்லுகிறான்: ""சகோதரா! சூரியாஸ்தமனத்தின் விநோதங்களைத் சென்று பார். சூரியனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்று குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. சூரியனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண்கொண்டு பார்க்காதே! சகோதரா! நீயாகவே போய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகுதான் உனக்கு அந்தத் தெய்வக்காட்சி சிறிது சிறிதாக விளங்கும். சூர்யோதயத்திலேயும், சூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திர ஜாலக் காட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விஷயமுண்டு. நேற்று இருந்தது போல இன்றைக்கு இராது! இன்று இருந்ததைப் போல நாளை இராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புகள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு ஆனந்தங்கள்.''
- வானம் வைரமுத்துவுக்கு மட்டுமா போதிமரம். நமக்கும்தானே. சொல்லித் தருகிறானே முண்டாசுக் கவி!
மாற்று இதயங்கள் மருத்துவமனைகளில் பொருத்தப்படுவதைவிடவும் நூலகங்களிலேதான் அதிகம் நிகழ்கின்றன. கனத்த இதயத்தை சுழற்றிப் போட்டுவிட்டு கனிவு நிறையும் கவிதை இதயங்களை நூலகங்களில்தானே பெற முடிகிறது.
இரு நண்பர்களுக்குள் பந்தயம். பத்தாண்டு ஒரு அறையில் தனித்து வாழ்ந்துவிட்டால் பெரும் பணம் தருவதாக பணக்கார நண்பர் சொன்னார். முதலிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனிமை பொறுக்க இயலாமல் தினம் ஒரு நூலாக கேட்டு படித்தபடி இருந்தார் உள்ளிருந்தவர். பத்தாண்டு முடியும்போது செல்வந்தர் செல்வமிழந்திருந்தார். பந்தயப் பணம் தர இயலாதே என்ற விசனத்துடன் கதவைத் திறந்தார். அங்கே நண்பர் இல்லை. கடிதம் இருந்தது. ""நண்பரே! இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் தந்த நூல்கள் என் ஆத்மாவை நிறைத்துவிட்டன. இதுவே பெருஞ்செல்வம். பந்தயப் பணம் இனி எனக்கு பயன் தராது. புத்தகங்களை விட்டுச் செல்கிறேன். இது நான் தங்களுக்குத் தரும் செல்வம்!'' நான் வாசிக்க நேர்ந்த ஆங்கில நூலொன்று தந்த இந்தக் கதையே என்னைப் புத்தகங்களை நேசிக்க வைத்தது.
நீங்களும் நேசிப்பீர்கள்தானே...