முகப்பு
சென்னை

சுமையாக மாறிவரும் ரயில் பயணம்: குமுறும் பயணிகள்!

சென்னை, மார்ச் 4: ரயில்களில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால்,ரயில் பயணம் இப்போது பயணிகளுக்கு ஒரு சுமையாக மாறி வருகிறது.  நாடு முழ

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:43 PM
பகிர்:

சென்னை, மார்ச் 4: ரயில்களில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால்,ரயில் பயணம் இப்போது பயணிகளுக்கு ஒரு சுமையாக மாறி வருகிறது.

 நாடு முழுவதும் தினமும் இயக்கப்படும் 17,050 ரயில்களில் 1.87 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில்வேயின் பயணக் கட்டண வருவாயும் உயர்ந்துள்ளது.

 ஆனால், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு வரும் 2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் 50 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தைப் பொருத்தவரை கடந்த நிதி ஆண்டில் பயணிகளுக்கான

 அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், வரும் நிதி ஆண்டில் இது ரூ. 33.31 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் ரயில்களிலும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 பெண்களுக்கு தனிப்பெட்டி தேவையா? ரயில்களில் பெண்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்காகவே தனிப் பெட்டிகள் இணைக்கப்பட்டன. ஆனால், இப்போது போதிய பாதுகாப்பு அளிக்கப்படாத நிலையில், பெண்களுக்கான தனி பெட்டி தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனி பெட்டியில் பயணம் செய்வதால் பெண்கள் மானபங்கம் செய்யப்படுவதும், அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது.

 அதற்கு பதிலாக முன்பதிவு செய்யும் பெட்டிகளில் குறிப்பிட்ட படுக்கைகளை (பெர்த்) பெண்களுக்கு என பிரத்யேகமாக (பே அலாட்மென்ட்) ஒதுக்கீடு செய்து, இதர பயணிகளுடன் பாதுகாப்பாக பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கலாம்.

 இதன் மூலம் ரயிலில் பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினர், டிக்கெட் பரிசோதகர், சக பயணிகளின் உதவியை பெண்கள் எளிதில் பெற இயலும்.

 புறக்கணிக்கப்படும் பொதுப் பெட்டிகள்: சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி, ரயிலில் 3-ம் வகுப்பு பொதுப் பெட்டியில்தான் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தார்.

 இப்போதும் அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டிகளில் ஏழை, எளிய மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். இந்தப் பொதுப் பெட்டிகள் புறக்கணிக்கப்படும் நிலை தொடர்கிறது.

 ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பொதுப் பெட்டிகளில் பயணிகள் கணக்கின்றி "பொதி மூட்டைகளாக' ஏற்றப்படுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டும் ரயில்வே துறை பொதுப் பெட்டிகளில் தலா 2 காவலர்கள், ஒரு டிக்கெட் பரிசோதகரை நியமிக்கத் தயங்குவது ஏன்?

 இதன்மூலம் பொதுப் பெட்டிகளில் சமூக விரோதிகள் டிக்கெட் எடுககாமல் பயணம் செய்து, ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியும். டிக்கெட் எடுக்கும் பயணிகள் வசதியாக நெரிசலின்றி நிம்மதியாக பயணம் செய்ய முடியும். ரயில்வேயின் வருவாயும் அதிகரிக்கும்.

 ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீஸôர்-ரயில்வே பாதுகாப்புப் படையினர் பொதுப் பெட்டிகளுக்கு சென்று ஆய்வு செய்தால், கடத்தல், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நிகழாமல் கட்டுப்படுத்த இயலும்.

 அனுமதி பெறாத விற்பனையாளர்கள், பிச்சைக்காரர்கள், விதிகளை மீறி பயணம் செய்வோரையும் தடுக்கலாம்.

 முன்பதிவு செய்த பெட்டிகளில் விதிமீறல்: ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் 2-ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளிலும், பகல் நேர ரயில்களில் உள்ள சேர் கார் பெட்டிகளிலும் கழிப்பறைகளுக்கு செல்லும் வழியை பலர் ஆக்கிரமிக்கின்றனர்.

 ரயில்வே ஊழியர்கள் அல்லது பயணம் உறுதி செய்யப்படாத டிக்கெட் வைத்துள்ளவர்களும் இதுபோல 2-ம் வகுப்பு பெட்டிகளில் இதர பயணிகளுக்கு இடையூறு அளிப்பது இன்னமும் தடையின்றி தொடர்கிறது. இதை டிக்கெட் பரிசோதகர்களும் கண்டுகொள்வது இல்லை.

 எலி, கரப்பான் தொல்லை: சென்னை-திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி, சென்னை- திருப்பதி, அனந்தபுரி, சென்னை- திருச்செந்தூர்

 உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களில் கரப்பான், எலி ஆகியவற்றின் தொல்லையால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் முழுமையாக பயன் அளிக்கவில்லை.

 பெரும்பாலான 2-ம் வகுப்பு பெட்டிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தியதால் பழையதாவும், தகுதியற்றதாகவும் உள்ளன. இந்தப் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

 தினமும் ரயில் பெட்டிகளைத் தூய்மையாகவும், முறையாகவும் பராமரித்து பூச்சித் தொல்லையைத் தடுக்க மருந்துகளைத் தெளிப்பதன் மூலம் மட்டுமே எலி, கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலும்.

 பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை வருமா?: பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களை பயணிகள் அதிக அளவில் வாங்குகின்றனர். ரயில் நிலையங்கள், சமையல் அறைப் பெட்டிகளில் (பேன்ட்ரி-கார்) இவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

 இதன் காரணமாகவும், ரயில் பெட்டிகள் "குப்பை வண்டிகளாக' மாற்றப்படும் அவல நிலை உள்ளது.

 முதல் வகுப்பு குளிர்சாதன வசதியுள்ள (ஏ.சி.) பெட்டிகளில் நியமிக்கப்படும் உதவியாளர்கள் உள்ளிட்டோர் பயணிகளிடம் இன்முகத்துடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்து, கண்காணிக்க வேண்டும்.

 ரயில்களில் மது குடிப்பது உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பயணிகளுக்கு புன்னகையுடன் கூடிய சேவையை வழங்க இனியாவது ரயில்வே துறை முன்வருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.