முகப்பு
சென்னை

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மந்தம்

சென்னை, அக்.24: சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் வியாபாரம் மந்தமாக இருக்கிறது, இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.  தீவுத்திடலில் இந்த ஆண்டு பட்டாசு விற்கப்படுகிறது என்ற தகவ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:54 PM
பகிர்:

சென்னை, அக்.24: சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் வியாபாரம் மந்தமாக இருக்கிறது, இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

 தீவுத்திடலில் இந்த ஆண்டு பட்டாசு விற்கப்படுகிறது என்ற தகவல் பொது மக்களிடம் போதிய அளவு சென்று சேராததே இதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்தனர். தீவுத்திடலில்தான் பட்டாசுக் கடைகளை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கடைகள் அமைக்க போதிய நேரம் இல்லாததால் திங்கள்கிழமை மதியம் வரை 20-க்கும் குறைவான பட்டாசுக் கடைகளே அமைக்கப்பட்டுள்ளன. தீவுத்திடலில் போதிய வசதிகள் இல்லாததால் மேலும் சில வியாபாரிகள் கடைகள் போடத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 துணிப் பந்தல், ஜெனரேட்டர்: பல பட்டாசுக் கடைகளின் கூரைகள் தகரத்தால் அமைக்கப்படாமல், சாதாரண பந்தலே போடப்பட்டுள்ளது. இப்போது உள்ள கடைகளுக்கு மின்சாரம் கிடைக்காததால், ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளனர்.

Advertisement

 வடகிழக்குப் பருவமழை தொடங்கும் சூழல் உள்ளதால் பட்டாசுகள் நனையுமே என்ற கவலையும் வியாபாரிகளிடம் இருக்கிறது. சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலை, பந்தர் தெரு, பத்ரியன் தெரு, ஆண்டர்சன் தெரு, மலையபெருமாள் தெரு, அம்பர்சன் தெரு ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் ஏராளமான பட்டாசுக் கடைகள் அமைக்கப்படும். ஆனால்,போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாரிமுனைப் பகுதியில் இந்த ஆண்டு பட்டாசுக் கடைகளை அமைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதனைத் தொடர்ந்து பாரிமுனை பகுதியைச் சேர்ந்த பட்டாசு வியாபாரிகள் சுமார் 117 பேர் பட்டாசுக் கடைகளை அமைக்க அனுமதி கேட்டு சென்னை பெருநகர் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இதனையடுத்து தீவுத்திடலில் பட்டாசுக் கடைகளை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஒவ்வொரு கடைக்கும் சென்னை மாநகராட்சியின் ஆலோசனைப்படி 3 மீட்டர் இடைவெளியுடன் சுமார் 100 சதுர அடியில் கடை அமைக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 கன்டெய்னரில் பட்டாசு விற்பனை: மழையில் இருந்து பட்டாசுகளைப் பாதுகாக்கவும், தகரக் கூரைகளை அமைக்க நேரம் இல்லாததாலும் சில வியாபாரிகள் கன்டெய்னர்களை பட்டாசுக் கடைகளாக மாற்றி உள்ளனர்.

 சென்னை பெருநகர் பட்டாசு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷேக் அப்துல்லா: பட்டாசுக் கடைகளை சிறப்பாக அமைப்பதற்கு வியாபாரிகளுக்கு 15 நாள் அவகாசம் தேவை. ஆனால், போதிய நேரம் ஒதுக்கப்படாததால் குறைவான பட்டாசுக் கடைகளே அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகைக்குள் அதிகபட்சமாக 50 பட்டாசுக் கடைகள் அமைக்கப்படும். தீவுத்திடல் பட்டாசுக் கடைகள் குறித்து விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. ஏராளமான மக்கள் பட்டாசுக் கடைகளை வந்து பார்க்கின்றனர், ஆனால் வாங்குவது குறைவு.

 இந்த இடத்துக்கு மக்கள் வர நேரடி பஸ் வசதிக்குறைவு. சொந்த வாகனங்களில் வருகிறவர்கள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடைகளுக்கு எதிரிலேயே நிறுத்துகின்றனர்.

 குடிநீர், கழிப்பிட வசதி போன்றவையும் இல்லை. எனவே ஒதுக்குப்புறமாக இருந்தாலும் வாங்க வருவோரை ஈர்ப்பதாக இல்லை.

 தீபாவளிக்கு இன்னும் ஒரே நாளே மீதம் இருப்பதால், அன்றைக்காவது பட்டாசு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments