முகப்பு
சென்னை

பாதியில் நிறுத்தப்பட்ட நந்தி ஆறு மேம்பாலப் பணி: வாகன ஓட்டிகள் அவதி

திருத்தணி, பிப். 25: பழைய சென்னை சாலை அருகே செல்லும் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் ஒரு வருடமாக அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

திருத்தணி, பிப். 25: பழைய சென்னை சாலை அருகே செல்லும் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் ஒரு வருடமாக அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

ஆறுபடை படைவீடுகளில் 5-ம் படைவீடாகத் திகழும் முருகன் கோயில் திருத்தணி நகரில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

÷மேலும் திருத்தணி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவள்ளூர், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வேலைக்காகச் சென்று வருகின்றனர்.

திருத்தணியில் உள்ள பழைய சென்னை சாலை அருகே நந்தி ஆறு செல்கிறது. இந்த ஆற்றைக் கடந்து தான் திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நந்தி ஆற்றின் குறுக்கே வாகனங்கள் செல்வதற்காகத் தரைப்பாலம் கட்டப்பட்டது.

இப்பாலத்தின் வழியாகத்தான் திருத்தணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், நகரி, புத்தூர், ரேணிகுண்டா, திருப்பதி, நாகலாபுரம் ஆகிய ஊர்களுக்கு வாகன சென்று வந்தன.

மழைக் காலங்களில் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மேலும் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி (கிருஷ்ணா நீர் தேக்கம்) அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பபட்டால் திருத்தணி குசஸ்தலை ஆறு மற்றும் நந்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ÷அப்போது திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மீது 4 அடிக்கு உயரத்திற்குத் தண்ணீர் செல்லும். இதனால் திருவள்ளூர், சென்னை, திருப்பதி உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருத்தணிக்குள் வாகனங்கள் நுழைய முடிவதில்லை. மேலும் பாலத்தை கடக்க நகர மக்களும் அவதிப்பட்டு வந்தனர். பாலத்தின் மேல் தண்ணீர் செல்லும் நேரத்தில் திருத்தணி நகரில் இருந்து வெளியூர்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள், தரைப்பாலத்தை அகற்றி அங்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.2.75 கோடி செலவில் நந்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த 2009 பிப்ரவரி மாதம் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் திருத்தணி நந்தி ஆற்றில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மேம்பாலப் பணிகள் நாளடைவில் மந்தமாகவும், ஆமை வேகத்திலும் நடைபெற்று வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு வரை மட்டுமே மேம்பால பணிகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இதுவரை உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டள்ளது. பாலப்பணிகள் செய்வதில் ஒப்பந்ததாரர் காலதாமதம் செய்ததால் அவரது டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் பாலப்பணிகள் நடப்பதற்க்கு கடந்த ஜனவரி மாதம் மறுடெண்டர் விடப்பட்டது. ஆனால் பாதியில் நின்றுவிட்ட உயர்மட்ட மேம்பாலப் பணிகள் இதுவரை தொடங்காமல் உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாற்காலிக தார் சாலையும் பழுது: நந்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம கட்டப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் வசதிக்காக பாலம் அருகே தற்காலிகமாக தார்சாலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாகத்தான் தற்போது அனைத்து வாகனங்கள் திருத்தணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறது.

இச்சாலையும் கடந்த 6 மாதங்களாக குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக சென்று வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகுள்ளாகின்றனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தி ஆற்றில் அடியோடு நிறுத்தப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க இதுகுறித்து சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் திருத்தணி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.