மெட்ரோ ரயில் பெட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் வருகை
சென்னை, மார்ச் 6: மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பிரேசில் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டு (2013) மார்ச் மாதம் சென்னைக்கு வரவிருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவித்தார். முதல் கட்டமாக 36 மெட்ரோ ரயில் பெட்டிக
சென்னை, மார்ச் 6: மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பிரேசில் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டு (2013) மார்ச் மாதம் சென்னைக்கு வரவிருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவித்தார்.
முதல் கட்டமாக 36 மெட்ரோ ரயில் பெட்டிகள் சென்னைக்கு வருகை தரவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ரயில் பெட்டிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் புராஜெக்ட்ஸ் இந்திய லிமிடெட் கன்சார்டியத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக வரவுள்ள 36 மெட்ரோ ரயில் பெட்டிகளை தவிர்த்து மற்ற பெட்டிகள் அனைத்தும் ஆல்ஸ்டாம் நிறுவனம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஸ்ரீ சிட்டியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வழங்கும்.
Advertisement
இந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க ஆல்ஸ்டாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரயில் பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து வழங்குவதோடு, சோதனை ரீதியாக இயக்கவும், இது தொடர்பான பயிற்சி அளிக்கவும், ரூ. 1,471 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த நிறுவனம் 168 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் 2008-ம் ஆண்டு முதல் வேகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பால பாதை மற்றும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக இந்த வழித்தடத்தில் அடுத்த (2013) ஆண்டு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படுகிறது. மேம்பாலம் வழி தடத்தில் மெட்ரோ ரயில் செல்லும்.
இதற்காக தூண்கள் அமைக்கும் பணியில் விரைவாக நடைபெற்று வருகிறது. இதுவரை 265 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 141 இணைப்பு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் 68 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளுடன் நிர்வாக அலுவலகம், ஒட்டுமொத்த மெட்ரோ ரயில்களை இயக்கக்கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு மையம், மெட்ரோ ரயிலை நிறுத்துவதற்கான இடமும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனையும் இங்கே பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள்: சென்னை மெட்ரோ ரயிலுக்காக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில், வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் இடையே 10 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், ஐந்து நிலையங்கள் பூமிக்கு மேலும் அமைக்கப்பட உள்ளன.
வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைக்கப்படுகின்றன. சின்னமலை, கிண்டி, ராணுவ அலுவலர் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.), மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையத்தில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரலிருந்து பரங்கிமலை வரையிலான பாதையில் 9 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், 8 ரயில் நிலையங்கள் மேம்பாலத்திலும் அமைக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர் மற்றும் திருமங்கலம் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் ரயில் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர் கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை இடையே பூமிக்கு மேல் பாலத்திலும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.