முகப்பு
சென்னை

நேரு பூங்கா - எழும்பூர் இடையே 84 மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கம்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் இடையில் 84 மீட்டருக்கு சுரங்கம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் இடையில் 84 மீட்டருக்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் 45 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு வழிப்பாதையாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
 இதில் 24 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 22 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
 பூமிக்கு அடியில் சுரங்க ரயில் பாதை அமைக்க, சுரங்கம் தோண்டும் பணி, நேரு பூங்காவில் கடந்த ஜூலை 28- ம் தேதி தொடங்கி பணி நடைபெற்று வருகிறது.
 வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "டனல் போரிங்' இயந்திரத்தின் உதவியுடன் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
 இந்த இயந்திரம் செப்டம்பர் மாதம் இறுதி வரை சுமார் 84 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டியுள்ளது.
 டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டி முடித்தவுடன், 6 மீட்டர் விட்டத்தில் தயாராக உள்ள வட்ட வடிவிலான சிமென்ட் வார்ப்புகள் பதிக்கப்படுகிறது. இப்போது வரை சுமார் 70 வட்ட வடிவிலான சிமென்ட் வார்ப்புகளைப் பொருத்தியுள்ளது.
 2-வது இயந்திரம்: இப்போது நேரு பூங்காவில் மற்றொரு டனல் போரிங் இயந்திரம் எழும்பூர் நோக்கி சுரங்கம் தோண்டுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதையின் இரண்டு வழிகளிலும் ரயில்கள் செல்லும். ஒரு பாதை ரயில் செல்வதற்கும் மற்றொரு பாதை ரயில் வருவதற்காகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
 இப்போது சுரங்கம் தோண்டி வரும் முதல் டனல் போரிங் இயந்திரம் 100 மீட்டர் நீளம் தோண்டி முடித்தவுடன், 2-வது டனல் போரிங் இயந்திரம் அடுத்த பாதையை தோண்டத் தொடங்கும்.
 வண்ணாரப்பேட்டை, மேதினப் பூங்கா : சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணிகள் மீண்டும் அக்டோபர் 15-ம் தேதி முதல் முழு வீச்சில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 அதேபோல சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவிலும் சுரங்கம் தோண்டும் பணிகள் அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மே தினப் பூங்காவில் சுரங்கம் தோண்டுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள "டனல் போரிங்' இயந்திரத்தின் பாகங்களை இணைக்கும் பணிகள் முடிந்துள்ளது.
 இவ்விடத்தில் சுரங்கம் தோண்டும் பணிக்கான தேதி அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி ரயில் நிலையம் வரை சுரங்கம் தோண்டப்படும். ஷெனாய் நகரில் இறக்கி வைத்துள்ள மிஷின் மூலம் ஒரு பக்கம் அண்ணாநகர் கிழக்கு, மறுபக்கம் பச்சையப்பன் கல்லூரி வரை சுரங்கம் தோண்டப்படும்.
 ஷெனாய் நகர்: ஷெனாய் நகர் பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியும் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்படும். ஷெனாய் நகரில் டனல் போரிங் மிஷின் 23 மீட்டர் ஆழத்துக்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. மிஷினை இயக்குவதற்காக தண்டவாளம் போடப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அங்கு சுரங்கம் தோண்டும் பணி துவங்கும்.
 சீனாவில் இருந்து இதுவரை 9 டனல் போரிங் இயந்திரங்கள் வந்துள்ளன. இன்னும் 2 இயந்திரங்களும் பல்வேறு பாகங்களாக வர உள்ளன.
 
 பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள். சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் சுரங்கம் அமைப்பதற்காக இறக்கப்படும் டனல் போரிங் இயந்திரத்தின் பாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments